தேர்தலில் கட்சியின் ஒற்றுமையை மக்கள் விரும்புகிறார்கள்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இருவரையும் முன்னிலைப்படுத்த வேண்டும்: மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

புதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2020      தமிழகம்
RB Udayakumar 2020 08 03

Source: provided

மதுரை : கடந்த மூன்றரை ஆண்டுகளில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியையும், துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வத்தையும் முன்னிறுத்தி தேர்தல் களத்தில் பெற்றுள்ள வெற்றியின் ஒற்றுமையைத்தான்  மக்கள் விரும்புகிறார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பேட்டியளிக்கையில் தெரிவித்தார். அதாவது சட்டமன்ற தேர்தலில் இருவரையுமே முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதே அமைச்சர் கருத்தாக உள்ளது.  

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல்:

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் பற்றிய பேச்சு இப்போதே அடிபட தொடங்கி விட்டது. சில தினங்களுக்கு முன் நிருபர்களுக்கு பேட்டியளித்த கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூவிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், புதிய முதலமைச்சரை சட்டமன்ற உறுப்பினர்கள் கூடித்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்று பதிலளித்தார். அதற்கு மறுநாள் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேட்டியளித்தார். அதாவது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தித் தான் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். 

அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

இந்த நிலையில் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரிடம் இது பற்றி கேட்கப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த அவர், இது கே.டி.ராஜேந்திரபாலாஜியின் சொந்த கருத்து. முதல்வர் வேட்பாளரை கட்சி மேலிடம்தான் முடிவெடுக்கும் என்று பதிலளித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மதுரையில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவரிடமும் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மக்கள் ஒற்றுமையைத்தான் விரும்புகிறார்கள். ஆகவே, இ.பி.எஸ், - ஓ.பி.எஸ். இருவரையும் முன்னிலைப்படுத்துவதே நன்மை பயக்கும் என்ற பாணியில் அவர் பதிலளித்தார்.   

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

கொரோனோ சிறப்பு நிதியாக தமிழகத்திற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. நாள்தோறும் 65 ஆயிரம் பேருக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்படும் நிலையில் பரிசோதனைக்காக நாள்தோறும் 5 கோடி ரூபாய் செல்வாகிறது.

தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக 56 சதவீதம் கிடைத்துள்ளது. கொரோனோ பாதிப்பிலிருந்து மதுரை மக்களை மதுரை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகவும் மீட்டெடுத்துள்ளது.  

மதுரை தற்போது கொரோனோவிலிருந்து பாதுகாப்பாக உள்ளது. தேவையான தளர்வுகளை தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. எம்.ஜி.ஆர். இருக்கும் வரை மக்கள் வேறு யாருக்கும் தீர்ப்பளிக்கவில்லை. இந்தியாவில் அ.தி.மு.க.வை 3-வது மாபெரும் இயக்கமாக மாற்றியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க. அரசு நிற்குமா? நிலைக்குமா? என்ற நிலையில் எளிமையின் அடையாளமாக திகழும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க. அரசு வலிமையான அரசு என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். 

ஒற்றுமையை மக்கள் விரும்புகிறார்கள்

முதல்வருக்கு துணையாக துணை முதல்வரும், மூத்த அமைச்சர்களும் அயராது துணை நிற்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நடைபெற்ற மினி பொது தேர்தலில் (சட்டமன்ற இடைத்தேர்தல்) முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியையும், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தையும் முன்னிறுத்தி தேர்தல் களத்தை சந்தித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளோம். இந்த ஒற்றுமையைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். 

கடந்த மூன்றரை ஆண்டுகளில் கூட்டுறவு தேர்தல், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி பயணத்தை மக்கள் விரும்புகிறார்கள். அதே பயணத்தை ஒற்றுமையோடு தொடர வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து