முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க அரும்பணியாற்றுகின்றனர் : முதல்வர் எடப்பாடி ஆசிரியர் தின வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 4 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை ஆற்றிவருகின்றனர் என்று ஆசிரியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

கல்வியறிவு பெற்ற சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு ஆசிரியராய் பணியை தொடங்கி, தனது அயராத உழைப்பால் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவ மேதை  டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணனை சிறப்பிக்கும் வகையில் அன்னாரது பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5-ம் நாள் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்ற கொன்றை வேந்தன் பாடலில் ஒளவையார், உடலுக்கு கண்கள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோன்று ஒருவனது வாழ்க்கைக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் போன்றது என்று கல்வியின் சிறப்பினை போற்றுகிறார்.  அத்தகைய சிறப்புமிக்க கல்விச் செல்வத்தை மாணாக்கர்களுக்கு போதிக்கும் ஆசிரியப் பெருமக்கள் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்  என்று தெய்வநிலைக்கு ஒப்பாக போற்றப்படுகிறார்கள். 

அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, அறப்பணியான ஆசிரியப் பணியினை அர்ப்பணிப்பு உணர்வோடு ஆற்றிவரும் நல்லாசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது, சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவித்தல், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்குதல், குழந்தைகள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் போன்ற சிறப்புமிக்க விருதுகளை வழங்கி ஆசிரியப் பெருமக்களை கௌரவித்து வருகிறது. 

நாட்டின் வருங்கால தூண்களான மாணவச் செல்வங்களுக்கு அழிவில்லா கல்விச் செல்வத்தை அளிப்பதோடு, ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகிய நெறிகளையும் போதித்து, வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் அரும்பணியை ஆற்றிவரும் ஆசிரியப் பெருமக்களுக்கு இந்நன்னாளில் எனது உளம்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து