முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியர்களுக்கு இராதாகிருஷ்ணன் விருதுகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

திங்கட்கிழமை, 7 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தின விழாவையொட்டி பள்ளிகளில் சிறப்பான முறையில் பணியாற்றி தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட 375 ஆசிரியர்களில், சென்னை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 15 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள், வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 10,000 ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். 

மாணாக்கர்களின் அறிவுக் கண்ணை திறக்கும் ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி, இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்து, ஆசிரியர் சமுதாயத்திற்கு பெரும் சிறப்பினை சேர்த்த தத்துவ மேதை டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் திங்கள் 5- ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு “டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது” வழங்கி தமிழ்நாடு அரசு கௌரவித்து வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு சிறந்த முறையில் பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும் விரிவுரையாளர்களில் 375 ஆசிரியர்கள் நல்லாசிரியருக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் சென்னை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 15 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று  டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள், வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 10,000 ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகளை வழங்கி கௌரவித்தார்.

மேலும், 2020-ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியை  இரா.சி. சரஸ்வதி மற்றும் பட்டதாரி ஆசிரியர்  ஸ்ரீதிலீப் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விருதிற்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். 

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,  தலைமைச் செயலாளர் சண்முகம், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி ஆணையர் சிஜிதாமஸ் வைத்யன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநர் எம்.பழனிசாமி  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து