முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை பெருங்குடியில் ரூ. 74 கோடியில் தமிழகத்தின் 2-வது அதிநவீன மாநில தரவு மையம்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 8 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில், சென்னை, பெருங்குடி, தமிழ்நாடு மின்னணு நிறுவன வளாகத்தில் 74 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் இரண்டாவது அதிநவீன மாநில தரவு மையத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், தமிழ்நாட்டிற்கான சைபர் பாதுகாப்பு கட்டமைப்புத்  திட்டத்தினை (Cyber Security Architecture -TN) செயல்படுத்திடும் விதமாக, முதற்கட்டமாக CERT-TN-ன் (Computer Emergency Response Team)https://cert.tn.gov.in என்ற இணைய தளத்தையும் துவக்கி வைத்தார். 

சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அம்மா, வெளியிட்ட அறிவிப்பில், அரசுத் துறைகள் தங்களது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை அதிக அளவில் பொதுமக்களுக்கு அளித்திட முனைந்து வரும் இத்தருணத்தில், தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் தற்போதுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் இத்தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை.

அரசுத் துறைகளின் அதிகரித்து வரும் தகவல் உட்கட்டமைப்பு தேவைகளை கருத்தில் கொண்டு தமிழகத்தின் இரண்டாவது மாநில தரவு மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.   

அதன்படி, சென்னை, பெருங்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்னணு நிறுவன வளாகத்தில் 74 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் இரண்டாவது அதிநவீன மாநில தரவு மையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இத்தரவு மையம் 195 அடுக்குகளை (Racks)கொண்டது.

இப்புதிய மாநில தரவு மையம், தமிழ்நாடு அரசின் மென்பொருள் பயன்பாடுகள் மற்றும்  இதர சேவைகளை பாதுகாப்பான முறையில் தரவேற்றம் செய்து பயன்படுத்திட உதவும்.  மேலும், G2G (அரசுத் துறைகளுக்கிடையில்), G2C (அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையில்) மற்றும் G2B (அரசுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் இடையில்) இணைய தள சேவைகளை வழங்குவதற்கும், வளர்ந்து வரும் அரசு துறைகளின் தகவல் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்திடவும் இந்த அதிநவீன மாநில தரவு  மையம்  நிறுவப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் 1.6.2018 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில் நுட்பவியல் உட்கட்டமைப்புகளான TNSWAN, TNSDC மற்றும் தமிழ்நாடு  அரசால் செயல்படுத்தப்படும் மின் ஆளுமை சேவைகளை இணைய அச்சுறுத்தல்கள் மற்றும்  தடைகளிலிருந்து கண்காணித்து, தடங்கலற்ற மற்றும் பாதுகாப்பான இணைய சேவையினை வழங்கும் பொருட்டு தமிழ்நாட்டிற்கான இணைய பாதுகாப்பு கட்டமைப்பு திட்டம்  (Cyber Security Architecture for Tamil Nadu) 21 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எல்காட் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாட்டின் இணைய பாதுகாப்பு கட்டமைப்பு (CSA-TN) திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக முதற்கட்டமாக, Centre for Development of Advanced Computing (C-DAC) மூலம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் செயல்படுத்தப்படவுள்ள CERT-TN-ன் (Computer Emergency Response Team) https://cert.tn.gov.in  என்ற இணைய தளத்தை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். 

இதன்மூலம், CERT- TN தமிழ்நாடு அரசின் கணினி அவசர கால  பதிலளிப்பு குழுவாக இருக்கும். அனைத்து அரசு துறைகளின்  கணினி கட்டமைப்புகளை தணிக்கை செய்தல், பாதுகாத்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய பணிகளில்   CERT- TN முக்கிய பங்கு வகிக்கும்.  மேலும், அரசு துறை சார்ந்த  இணைய தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பயனுள்ள இணைய  பாதுகாப்பு  தகவல் மற்றும் கருத்துக் கேட்பு ஆகிய வசதிகளை வழங்கும் விதத்தில் CERT-TN இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தடையற்ற இணையவழி சேவைகள் மற்றும் அரசு துறைகளின் தரவுகளின்  பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், தலைமைச்செயலாளர் சண்முகம், தகவல் தொழில்நுட்பவியல் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ஹன்ஸ் ராஜ் வர்மா, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விஜயகுமார், C-DAC இயக்குநர்   கமாண்டர் பிரகாஷ்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து