முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசின் தீவிர முயற்சியால் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது: கொரோனா விஷயத்தில் ஆதாரமின்றி எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன: காஞ்சிபுரத்தில் முதல்வர் எடப்பாடி பேச்சு

வெள்ளிக்கிழமை, 11 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

காஞ்சிபுரம் : அரசின் தீவிர முயற்சியால் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. கொரோனா விஷயத்தில் ஆதாரமின்றி எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டியும், கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும் உரையாற்றினார். 

இந்த விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட  கலெக்டர் பொன்னையா தலைமை வகித்தார். தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பா. பெஞ்சமின், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர்  பழனி, காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் வரவேற்றுப் பேசினார்.

விழாவில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 128 பயனாளிகளுக்கு 291. 20 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து 43 பணிகளுக்கு ரூபாய் 120. 23 கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் இரு மாவட்டங்களை சேர்ந்த 22436 பயனாளிகளுக்கு ரூபாய் 331. 10 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் தமிழக முதல்வர் வழங்கினார்.  பின்னர் அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட மையத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் ஆகியோரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று கலந்துரையாடினார். அதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ. 100 கோடியில் யோகா மையம் அமைக்கப்படும். காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். ஆந்திரம், கர்நாடகம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக இறப்பு சதவீதம் மிகவும் குறைந்து இருக்கிறது.

இதற்கு முன்பு தினசரி 118, 115 என இறப்பு விகிதம் இருந்த நிலையில் தற்போது இறப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்து இருக்கிறது. 

ஏற்கெனவே உடலில் பாதிப்புகள் இருந்தவர்களால் தான் இறப்பு அதிகமாக இருக்கிறது. கொரோனா நோய்தொற்று காரணமாக தடுப்புப் பணிகளை தமிழக அரசு தீவிரமாக முயற்சி மேற்கொண்டதால் கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் மிகவும் குறைந்துள்ளது. ஆனால் ஆதாயம் தேடுவதற்காக எதிர்க்கட்சிகள் தமிழக அரசை குறை கூறி வருகின்றன.

சுகாதாரத்துறையினர், வருவாய் துறையினர், ஊராட்சி பணியாளர்கள் என அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு குடும்பத்தையும், உயிரையும் பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர்.

ஆனால் எதிர்க்கட்சிகள் இதை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஆதாரமின்றி குற்றம் சாட்டுவது சிறிதும் ஏற்கக் கூடியது அல்ல. கொரோனா காலத்திலும் வேளாண்மைத் துறையில் வரலாற்று சாதனை படைத்திருக்கிறது தமிழக அரசு. 

மற்ற மாவட்டங்களில் வேளாண்மை துறை இருக்கும் அல்லது தொழில்துறை சிறந்திருக்கும். ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டும் இணைந்த சிறந்த மாவட்டமாக இருக்கிறது. கொரோனா காலத்திலும் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்களை இயங்க அம்மா அரசு அனுமதித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைவதற்கு மேலும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். குடிமராமத்து பணிகளை முதன் முதலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  தொடங்கினேன்.

காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரை இது ஒரு ராசியான மாவட்டம். முதலில் குடிமராமத்துப் பணியை காஞ்சிபுரம் மாவட்டத்தில் துவங்கியதால் தமிழ்நாடு முழுவதும் நன்றாக மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி கொண்டிருக்கின்றன.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழு தடுப்பணைகள் கட்ட முயற்சி மேற்கொண்டு இரண்டு கட்டப்பட்டு விட்டது, ஒன்று கட்டப்பட்டு வருகிறது. 

மீதி தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ. 285 கோடிக்கு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் வட்டம் உதயம் பாக்கம் பகுதியில் ரூ. 300 கோடியில் கதவணை தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். மதுராந்தகம் ஏரி 125 கோடியில் தூர்வாரி ஆழப்படுத்தப்படும். 60 கோடியில் புனரமைக்கப்படும். பல்லாவரம் குரோம்பேட்டையில் வெள்ளத் தடுப்பு பணிகள் ரூபாய் 41 கோடி அளவில் மேற்கொள்ளப்படும்.

காஞ்சிபுரத்தில் ரூ. 2085 கோடி மதிப்பில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூபாய் 18 கோடி மதிப்பில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து