முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து எப்போது? -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்

சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

காஞ்சி : மாநிலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.

அப்போது நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:-கேள்வி:- தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து....

பதில்:-  மாநில அரசு கொரோனாவை தடுப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எங்கெல்லாம் நோய் தொற்று இருக்கிறதோ, அங்கெல்லாம் நடமாடும் மருத்துவக் குழு, அந்த பகுதிக்கே சென்று, அப்பகுதிகளில் உள்ள மக்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, தொற்று அறிகுறி இருந்தால் அவர்களை அழைத்து வந்து  பரிசோதனை செய்து, பரிசோதனையில் பாசிட்டிவ்வாக இருந்தால், மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைய செய்கிறார்கள். 

கேள்வி:- தென் மாவட்டங்களில் கீழடி போன்ற பகுதிகளில் அகழ்வராய்ச்சி பணிகள் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. வட மாவட்டங்களில் பாலாற்று கரையோரங்களில் பழவேரி போன்ற கிராமங்களில் 5000 ஆண்டுகள் பழைமையான பொருட்கள் கிடைக்கிறது. அங்கு அகழ்வராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுமா?

பதில்:- ஒவ்வொரு பகுதியாக அகழ்வராய்ச்சி செய்து வருகிறோம். நீங்கள் சொல்கின்ற கருத்தையும் அரசு பரிசீலிக்கும். கேள்வி:-  மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து எப்போது தொடங்கும்?

பதில்:- கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அது குறைந்த பிறகு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தொடங்கப்படும். 

கேள்வி:- பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி இல்லை, சிகிச்சை பெறுவதற்கு செங்கல்பட்டிற்கு தான் செல்ல வேண்டியிருக்கிறதே?

பதில்:- ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அதில் எந்த குறைப்பாடும் இல்லை. எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது தான் அம்மாவின் அரசின் திட்டம். அந்த அடிப்படையில் வரலாற்று சாதனையாக தமிழ்நாடு முழுவதும் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை நாங்கள் துவக்கி இருக்கிறோம்.

அதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை மூலமாக பிரேரணை அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இங்கேயும் மருத்துவக் கல்லூரி துவங்கப்படும். 

கேள்வி:- பட்டுப் பூங்கா பணிகள் கடந்த 10 ஆண்டுகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதே?

பதில்:- அறிஞர் அண்ணா பட்டுப் பூங்கா பற்றி சொல்கிறீர்கள். இப்போது 25 சதவிகித பணிகள் முடிவடைந்திருக்கிறது. எஞ்சிய பணிகள் விரைவாக நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. 

கேள்வி:- பட்டு கூட்டுறவு சங்கங்களில் 96 கோடி ரூபாய் அளவிற்கு பட்டு சேலைகள் விற்பனையாகாமல் தேங்கி இருக்கின்றன.  அதை அரசு கொள்முதல் செய்தால் நெசவாளர்களுக்கு உதவியாக இருக்குமே?. 

பதில்:- இது ஒரு சோதனையான காலம். கொரோனா தொற்று இருக்கின்ற சூழ்நிலையில் நான்கு ஐந்து மாத காலமாக எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. தற்போது தான் திறந்து இருக்கிறார்கள்.

படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. இயல்பு நிலைக்கு வருகின்ற போது இந்த பட்டு சேலைகள் எல்லாம் விற்பனையாகி விடும். 

கேள்வி:- காஞ்சிபுரம், பாலுசெட்டி சத்திரம் அருகே கீழ்கதிர்பூரில் கட்டப்பட்ட கட்டடம் திறக்கப்படாமல் கிடப்பில் இருக்கிறதே?பதில்:- அவை மாதிரிக்காக கட்டப்பட்ட கட்டிடங்கள். தற்போது கூட 2112 வீடுகள்  ஆற்றின் கரையோரம் இருக்கின்ற மக்களுக்காக கட்டி கொடுத்து இருக்கிறோம்.

பல வீடுகள் கட்டப்பட்டு இருக்கின்றன. லட்சக்கணக்கான வீடுகள் ஏழை எளிய மக்களுக்கு கட்டுவதற்காக அரசால் திட்டம் தீட்டப்பட்டு, எல்லா மாவட்டங்களிலும் வீடுகள் கட்டுகின்ற திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி கொண்டிருக்கின்றோம். 

கேள்வி:- காஞ்சிபுரம் நீதிமன்ற கட்டிடம் பழைமையான கட்டிடடமாக இருக்கிறது. நகர்ப்புரத்தில் இருக்கிறது. போக்குவரத்திற்கு நெரிசலாக இருக்கிறது. இதை விரிவுபடுத்துவதற்கான திட்டம் இருக்கிறதா?

பதில்:- காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்காக 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

கேள்வி:-  அனைத்து நெசவாளர்களுக்கும் கொரோனா நிதி வழங்கப்படும் என்று சொன்னீர்கள். ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 31 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் ஆனால் 7 ஆயிரம் பேருக்கு தான் நிதி வழங்கப்பட்டுள்ளதே? 

பதில்:- நெசவாளர்கள் சங்கத்தில் பதிவு செய்தவர்களுக்கு தான் கொடுக்க முடியும். பதிவு செய்யாதவர்களுக்கு எப்படி நிதி கொடுக்க முடியும். நாளைக்கு ஆடிட்டிங்கில் பிரச்சனை வரும். இதற்கு கணக்கு இருக்கிறது. யார் யாரெல்லாம் பதிவு செய்திருக்கிறார்களோ அவர்களுக்கு தான் நிதி அளிக்க முடியும். 

கேள்வி:- ஆண்டுதோறும் சுத்தமான நகரங்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு பட்டியலில் தமிழக நகரங்கள் பின்தங்கி உள்ளதே. தமிழக நகரங்கள் சுத்தமாக இல்லையா?

பதில்:- எந்த அடிப்படையில் சுத்தமாக இல்லை என்று சொல்கிறீர்கள். ஏற்கனவே இருந்த அரசாங்கத்திற்கும் இப்போதுள்ள அரசாங்கத்திற்கும் உள்ள வேறுபாட்டை பாருங்கள். அம்மாவின் அரசு எவ்வளவு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. பாதாள சாக்கடை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நகரங்கள் எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்கு தான் எல்லா பெருநகரங்களிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இன்றைக்கு எல்லா நகரங்களிலும் சாலை வசதிகள், தெரு விளக்கு வசதிகள், கழிவுநீர் அகற்றும் வசதிகள், கால்வாய் வசதிகள்  அமைக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. 

கேள்வி:- ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட காலம் முடியப் போகிறதே?

பதில்:- இதுகுறித்து ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெளிவுப்படுத்தி விட்டார். 

கேள்வி:- காஞ்சிபுரத்தில் ஜரிகை ஆலை நவீனப்படுத்தாமல் இருக்கிறதே?. பட்டு நெசவாளர்களுக்கு ஜரிகைகள் கிடைப்பதில் சிரமம் இருக்கிறதே?.

பதில்:- அது குறித்து அரசு பரிசீலிக்கும். அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து பேசி பட்டு நெசவாளர்களுக்கு தேவையான ஜரிகைகள் அனைத்தும் எதிர்காலத்தில் கிடைப்பதற்கு அரசு முயற்சி மேற்கொள்ளும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து