முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதைப்பொருள் விவகாரம்: நடிகைகள் ராகிணி, சஞ்சனாவுக்கு மேலும் 3 நாட்கள் போலீஸ் காவல்

சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகைகள் ராகிணி, சஞ்சனாவுக்கு மேலும் 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது, கன்னட திரை உலகினர் விருந்து நிகழ்ச்சிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மற்றும் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்தது குறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, இவர்களது நண்பர்களான ரவிசங்கர், ராகுல், போதைப்பொருள் விற்பனையாளர்களான வீரேன் கண்ணா, தென்ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த லோயம் பெப்பர் சம்பா, பிரதீக் ஷெட்டி, நயாஷ், பிரசாந்த் ரங்கா ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் 9 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி போதைப்பொருட்கள் பயன்படுத்தியதுடன், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ள பிரசாந்த் ரங்கா, பிரதீக் ஷெட்டி, லோயம் பெப்பர் சம்பாவுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி கைதான ராகிணி திவேதியின் போலீஸ் காவல் நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. அதுபோல, நடிகை சஞ்சனா கல்ராணியின் போலீஸ் காவலும் நேற்றுடன் (சனிக்கிழமை) நிறைவு பெற்றது.

ஆனால் நேற்று 2-வது சனிக்கிழமை கோர்ட்டு விடுமுறை என்பதால் ஒரு நாளுக்கு முன்பாக நேற்று முன்தினமே நடிகை சஞ்சனா கல்ராணியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க முடிவு செய்தனர்.

இதுபோன்று, போதைப்பொருள் விற்பனையாளர்கள் வீரேன் கண்ணா, லோயம் பெப்பர் சம்பா, ரவிசங்கர், ராகுல் ஆகிய 4 பேரின் காவலும் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. ஆனால் போதைப்பொருள் விவகாரத்தில் நடிகைகள் உள்பட 6 பேரிடமும் மேலும் விசாரணை நடத்த முடிவு செய்தனர். 

இதற்காக அவர்களை மீண்டும் காவலில் விசாரிக்கவும் முடிவு செய்திருந்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் மதியம் பெங்களூரு 1-வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி ஜெகதீஷ் முன்னிலையில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 6 பேரும் காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது போதைப்பொருள் பயன்படுத்தியது, விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்த விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, மற்ற 4 பேருக்கு தொடர்பு இருப்பது தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய அறிக்கை நீதிபதியிடம், போலீசார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணிக்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் விசாரணையின் போது கிடைத்துள்ளது.

ஆனால் போலீஸ் காவலில் இருந்த போது 2 நடிகைகளும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதன் காரணமாக அவர்களிடம் சரியான விசாரணை நடத்தி தகவல்களை பெற முடியவில்லை.

எனவே போதைப்பொருள் விவகாரம் குறித்து நடிகைகள் உள்பட 6 பேரிடமும் மேலும் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றார். 

அதே நேரத்தில் நடிகைகள் ராகிணி, சஞ்சனா தரப்பில் ஆஜரான வக்கீல்கள், அவர்கள் 2 பேரையும் மீண்டும் போலீஸ் காவலுக்கு அனுப்ப கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது எந்த விதமான போதைப்பொருட்களும் கிடைக்கவில்லை என்றும், போதைப்பொருள் விவகாரத்தில் 2 பேருக்கும் எதிராக எந்த சாட்சி ஆதாரங்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை என்றும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கூறிய வாய் மொழியான தகவல்களின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் நீதிபதியிடம் வக்கீல்கள் கூறினர். 

பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெகதீஷ், போதைப்பொருள் விவகாரத்தில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, ரவிசங்கர், ராகுல், வீரேன் கண்ணா, லோயம் பெப்பர் சம்பா ஆகிய 6 பேரையும் மேலும் 3 நாட்கள் (அதாவது 14-ம் தேதி வரை) போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இதன் காரணமாக காணொலி காட்சி மூலமாக கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டு இருந்த நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி கடும் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்தனர். 

இதையடுத்து, போதைப்பொருள் விவகாரம் குறித்து மகளிர் பாதுகாப்பு மையத்தில் வைத்து நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நடிகை ராகிணி திவேதி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணையும் வருகிற 14-ம் தேதி நடைபெற உள்ளது. போதைப்பொருள் விவகாரத்தில் நடிகைகளிடம் விசாரிக்க 3 நாட்கள் அவகாசம் கிடைத்திருப்பதாக, அந்த 3 நாட்களும் தீவிர விசாரணை நடத்தி, அவர்களுக்கு எதிராக சாட்சிகளை திரட்ட போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து