பெற்றோர் சூட்டிய பெயரால் இப்போது படாதபாடுபடும் கேரளத்து இளம்பெண்

சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2020      சினிமா
corona-Lady 2020 09 12

Source: provided

திருவனந்தபுரம் : கொரோனா என்ற பெயரை கேட்டாலே அலறி ஓடும் இந்த நேரத்தில் ஒரு பெண்ணுக்கு அவரது பெயரே கொரோனா என்று இருந்தால் எப்படி இருக்கும்.

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள சுங்கோன் பகுதி முத்துக்குளம் சோழத் தெருவை சேர்ந்தவர் சைன் தாமஸ். மீனவர். இவரது மனைவி பெயர்தான் எஸ்.கொரோனா. 

34 வருடங்களுக்கு முன்பு இவரது பெற்றோர் குழந்தையாக இருந்த அவரை அங்குள்ள தேவாலயத்திற்கு எடுத்துச் சென்று போதகரிடம் இந்த பெண் குழந்தைக்கு பெயர் வைக்கும் படி கூறினர். 

அப்போது பாதிரியார் ஜேம்ஸ் என்ன பெயர் சூட்டலாம் என்று பெற்றோரிடம் கேட்டுள்ளார். அப்போது தங்களுக்கு எந்த பெயரும் ஞாபகத்திற்கு வரவில்லை. நீங்களே பெயரை சூட்டுங்கள் என்று பாதிரியார் ஜேம்சிடம் கூறி உள்ளனர். 

அதற்கு பாதிரியார் ஜேம்ஸ் அக்குழந்தைக்கு கொரோனா என்ற பெயரை சூட்டி உள்ளார். அதற்கு (க்ரவுன்) என்று அர்த்தம் என்றும் கூறி உள்ளார். இந்த பெயர் நன்றாக இருப்பதாக பெற்றோர் கூறி உள்ளனர். பள்ளி சான்றிதழ்களிலும் அவரது பெயர் கொரோனா என்றே இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில் தற்போது உலகையே அச்சுறுத்தும் கொரோனா பெயர் தனக்கு சூட்டப்பட்டுள்ளதால் அதனால் படாதபாடுபட்டு வருவதாக சைன்தாமசின் மனைவி எஸ்.கொரோனா வேதனையுடன் கூறினார். 

இவரை, இவரது மகன்களே கொரோனா அம்மா என்றே அழைக்கிறார்கள். சிலர் வைரஸ் அம்மா என்று கிண்டல் செய்கிறார்கள். ஆனாலும் அதை சிரிப்புடன் எஸ்.கொரோனா கேட்டுக்கொள்கிறார். இது பலமுறை தனக்கு வேதனையாக இருந்தாலும் இதுபற்றி யாரிடமும் புகார் செய்யவில்லை என்று கூறுகிறார். 

அடிக்கடி ரத்த தானம் செய்யும் பழக்கம் உள்ள எஸ்.கொரோனா சமீபத்தில் அங்குள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ முகாமில் ரத்த தானம் செய்ய பெயரை கொடுத்துள்ளார்.

அப்போது பெயர் எழுதும் இடத்தில் தனது பெயரை எஸ்.கொரோனா என்று எழுதிய போது டாக்டர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பிறகு நிலைமையை கூறி சமாளித்துள்ளார். 

இதுபோன்று பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தனது பெயரை பிறரிடம் சொல்லும்போது சிலர் சும்மா காமெடி செய்யாதீர்கள் என்று கூறுவார்கள். அவர்களிடம் அது நிஜம் என்று நிருபிப்பதற்குள் அவருக்கு போதும் போதுமென்று ஆகிறது. 

34 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் ஆசையில் வைத்த பெயர் இப்போது பாடாய் படுத்துகிறதே என்று நொந்து கொள்கிறார் எஸ்.கொரோனா. ஆதார், குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கி கணக்கு, தேர்தல் அடையாள அட்டை என அனைத்திலும் எஸ்.கொரோனா என்றே பெயர் இருப்பதால் பெயரை மாற்றும் எண்ணமே தனக்கு இல்லை என்று சோகத்திலும் உறுதியாக இருக்கிறார் 2 மகன்களுக்கு தாயான இளம்பெண் எஸ்.கொரோனா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து