சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது: பக்தர்கள் தரிசனத்துக்கான தடை நீடிப்பு

செவ்வாய்க்கிழமை, 15 செப்டம்பர் 2020      இந்தியா
Sabarimala-Iyappan 2020 09

Source: provided

சபரிமலை : புரட்டாசி மாத பூஜைக்காக இன்று (புதன்கிழமை) சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், கொரோனா காரணமாக பக்தர்களின் நேரடி தரிசனத்திற்கான தடை நீடிக்கிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களும் நடை திறக்கப்பட்டு பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாத பூஜைக்காக இன்று (புதன்கிழமை) கோவில் நடை திறக்கப்படுகிறது. இன்றைய தினம் மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். 

பிறகு கோவில் ஊழியர்கள், போலீசார் ஆகியோருக்கு பிரசாதம் வழங்கப்படும். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை 17-ம் தேதி (வியாழக்கிழமை) முதல் 21-ம் தேதி வரை 5 நாட்கள் அதிகாலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் தினசரி பூஜைகள் நடைபெறும்.

கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளையொட்டி சிறப்பு பூஜைகளான நெய்யபிஷேகம், படி பூஜை, உதயா ஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறாது. 5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு 21-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு புரட்டாசி மாத பூஜைகள் நிறைவு பெறும். ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், கொரோனா காரணமாக பக்தர்களின் நேரடி தரிசனத்திற்கான தடை நீடிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து