முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை 2-ஆக பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய பல்கலைக்கழகம் : 110- விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்ட ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவை விதி எண். 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

சட்டப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,  

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கேற்ப அம்மா, தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல அரசு கலைக் கல்லூரிகளையும், பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகளையும், பொறியியல் கல்லூரிகளையும், பிற உயர்கல்வி நிறுவனங்களையும் துவக்கினார். 

அம்மாவின் வழியில் செயல்படும் அம்மாவின் அரசும், பல உயர்கல்வி நிறுவனங்களை தொடர்ந்து உருவாக்கியும், பல உயர் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்தியும் வருகிறது.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் மற்றும் மூலைமுடுக்கில் உள்ள ஏழை, எளிய மாணாக்கர்களின் உயர்கல்வி கனவு நனவானது.  இதன் காரணமாகத்தான் அகில இந்திய அளவில் 26.3 விழுக்காடு என இருக்கும் மாணவர் சேர்க்கை விகிதம், தமிழ்நாட்டில் மிக அதிகமாக, அதாவது 49 விழுக்காடு என்ற அளவில் உள்ளது.  

சட்டத்துறை அமைச்சர் மற்றும் விழுப்புரம் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

இப்பல்கலைக்கழகம் நடப்பாண்டிலேயே செயல்பட துவங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து