கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ரூ.7,168 கோடி செலவு: சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020      தமிழகம்
ops 2020 09 16

Source: provided

சென்னை : கொரோனா பரவலை கட்டுப் படுத்த தமிழகத்தில் ரூ.7,168 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சட்டசபையில் கொரோனா பாதிப்பு விவகாரம் சிறப்பு கவன ஈர்ப்பாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினின் கேள்விக்கு பதில் அளித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

எதிர்பாராதவிதமாக கொரோனா தொற்று நோய் இன்றைக்கு உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது. எந்த சூழ்நிலையிலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா இயற்கை சீற்றங்கள் நம் தாயகத்தை ஆட்கொண்டபோது, அது சுனாமி யாக இருந்தாலும் சரி, புயலாக இருந்தாலும் சரி, வறட்சியாக இருந்தாலும் சரி, பெரும் வெள்ளமாக இருந்தாலும் சரி அதையெல்லாம் எதிர்கொண்டு மக்களைக் காப்பாற்றுகின்ற ஆட்சியாகத்தான் அவர் கற்றுத்தந்த பாடத்தின் அடிப்படையில், அவர் நடத்திய ஆட்சியின் வழிக்காட்டுதலை நாங்கள் மேற்கொண்டு, இந்த கொரோனா பேரிடரை எதிர்கொண்டு வெற்றி கண்டிருக்கிறோம். 

எதிர்க்கட்சி தலைவர் உரையின் போது, கொரோனா பேரிடரின் காரணமாக பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை மறுபரிசீலனை செய்து, நிதி ஒதுக்கீடு செய்வது பற்றிய அறிவிப்பு இல்லை என்ற குறைபாட்டை விளக்க வேண்டும் என்று சொன்னார்.

அவருக்கு சில விளக்கங்களை முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.  கோவிட்-19 நோய் பரவலால் பொருளாதாரத்தில் பெரிய தாக்கம் ஏற்பட்டிருந்தாலும், பொதுநல மற்றும் மக்கள் நலத்திட்டங்களை அ.தி.மு.க. அரசு எவ்வித குறைவுமின்றி செயல்படுத்தி வருகிறது. பொருளாதாரத்தில் பின்னடைவு நிலவும் பொழுது, மக்களின் நுகர்வு தேவையில் குறைவு ஏற்படுவதால், அரசு தனது செலவினங்களை அதிகப்படுத்தி மக்கள் பயனடையும் விதம் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினால் மட்டுமே, பொருளாதாரத்தில் நுகர்வு அதிகரிக் கும். ஆகவே, அ.தி.மு.க. அரசு மக்கள் நலச் செலவினங்களைக் கட்டுப்படுத்திட விரும்பவில்லை. 

கொரோனா நோய்த்தாக்கத்தினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து விதமான கூடுதல் செலவினங்களும் துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளன. கொரோனா நோய்த்தாக்கம் தமிழகத்தை அடைந்தவுடன், நாட்டிலேயே முன்னோடியாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு கடந்த மார்ச் 28-ம் நாள் கடிதம் எழுதி ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு கடன் வாங்கி, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ரூ.9 ஆயிரம் கோடி வழங்கிட வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தார்.

2020-2021-ம் ஆண்டிற்கு புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என சிலர் இங்கே முன்வைக்கும், எதிர்க்கட்சி தலைவர் முன்வைக்கும் வாதம் அவசியம் இல்லாதது.

இதுபோக, மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் கொள்முதலுக்காக ரூ.830.60 கோடி, மருத்துவ கட்டுமான பணிகளுக்காக ரூ.147.10 கோடி, கூடுதலாக நியமிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களுக்கான சம்பளம் மற்றும் ஏற்கனவே உள்ள பணியாளர்களுக்கான உணவு மற்றும் இதர ஊக்க செலவினங்களுக்காக ரூ.243.50 கோடி, கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான பொதுவான செலவாக ரூ.638.85 கோடி, மருத்துவமனை தனிமைப்படுத்துதல் செலவினங்களுக்காக ரூ.262.25 கோடி, வெளிமாநில தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.143.62 கோடி செலவிடப்பட்டுள்ளது. 

பொது வினியோக திட்டம் மூலம் இலவசமாக பொருட்கள் வழங்கி வருவதனாலும், ரேஷன் அட்டைதாரர்களுக்கும், நிருபர்கள், மீனவர்கள், திருநங்கைகள், பழங்குடியினர்கள், வியாபாரிகள், சீர்மரபினர், நரிக்குறவர், பூசாரிகள், உலமாக்கள், பட்டாசு தொழிலாளர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள், மாற்றுத்திறனாளிகள், முடிதிருத்துவோர், நலவாரிய உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கு ரொக்கப்பண உதவியாக மொத்தம் ரூ.4,896.05 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம், கொரோனா நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, ரூ.7,167.97 கோடி, அ.தி.மு.க. அரசினால் செலவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிப்படைந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து, வளர்ச்சியைப் பெருக்குவதற்கு, தமிழக அரசு, முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரங்கராஜன் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது அ.தி.மு.க. அரசு. அந்த குழு பல்வேறு துறைச் சார்ந்த பரிந்துரைகளை விரைவில் சமர்ப்பிக்கும்.   கொரோனா நோய்த் தொற்றினால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்கள் துணை பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

செலவினங்களை கட்டுப்படுத்துவதற்காக அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. திருத்திய மதிப்பீடுகள் வெளியிடப்படும் பொழுது பட்ஜெட்டில் உள்ள சம்பந்தப்பட்ட தலைப்புகளில் நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்படும். வருவாய் வரவினங்களின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதால், ஏதேனும் மாற்றம் இருப்பின், உடனடியாக வருவாய் கணிப்புகள் மாற்றியமைக்கப்படும்.

அரசு செயல்படுத்திவரும் நலத்திட்டங்கள் மக்கள் நலனுக்காக எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும்.   பொருளாதாரம் நலிவுற்றிருக்கும்பொழுது அரசு செலவு செய்தாலொழிய, வேறு யாராலும் செலவு செய்து பொருளாதாரத்தை மீண்டு எழச் செய்ய இயலாது. ஆகவே, தொடர்ந்து மக்கள் நலச் செலவினங்களை செயல்படுத்துவதில் அ.தி.மு.க. அரசு உறுதியுடன் உள்ளது.

முதல்-அமைச்சரின் அறிவிப்புகள், அமைச்சர்களின் அறிவிப்புகள், 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தும். 

மேற்கூறிய காரணங்களால், 2020-21-ம் ஆண்டிற்கு திருத்திய வரவு-செலவு திட்ட மதிப்பீடு தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்வைக்கும் கோரிக்கை அவசியம் இல்லாதது என்று தெளிவாக தெரிய வருகின்றது.  இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து