முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சூர்யா மீது அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை: தலைமை நீதிபதி அமர்வு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 18 செப்டம்பர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடிகர் சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். 

அதில், கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட, மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிப்பதாகவும், கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது என்றும் கூறியிருந்தார்.

சாதாரண குடும்பத்து பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 

இந்த நிலையில் உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதினார். 

அதில், உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை ஐகோர்ட்டின் நேர்மை, சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. சூர்யாவின் கருத்து மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது.

நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.

அதேசமயம், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அவசியமில்லையென சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் ஆறு பேர் சூர்யாவுக்கு ஆதரவாக தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். அந்த கடிதத்தில், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்தின் கருத்தினை கணக்கில் கொள்ள வேண்டாம் என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். 

இந்நிலையில், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்தின் கடிதம் மீது விசாரணை நடத்திய தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என தனது முடிவை அறிவித்தது.

மேலும் தன்னளவில் சரியாக நடந்து கொள்வதாக கூறும் சூர்யா போன்றவர்கள், நீதித்துறை மீது விமர்சனங்களை வைப்பதற்கு முன்பாக, அது நியாயமானதா, இல்லையா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியத்தின் கடிதத்தை நீதிபதிகள் நிராகரித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து