முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 18 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தலைமைச் செயலாளர் சண்முகம், அனைத்துத் துறை செயலாளர்கள், சம்மந்தப்பட்ட துறை தலைவர்கள், விமானப்படை, கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருடன் அக்டோபர் மாதம் துவங்க உள்ள வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 

இக்கூட்டத்தில் பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபடும் பல்வேறு துறை அலுவலர்களது செயல் திறன்களை மேம்படுத்த அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்,  பேரிடர் காலங்களில் நடத்தப்படும் மாதிரி பயிற்சிகள் (Mock Drill) சமூக இடைவெளியை பயன்படுத்தி 50 பேருக்கு மிகாமல் பயிற்சி அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. 

பேரிடர் காலங்களில் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் குறிப்பாக அனைவரும் வெளியில் செல்லும் போதும், பொது இடத்தில் தங்க வைக்கும் போதும், பயணிக்கும் போதும் முகக்கவசம் கட்டாயமாக அணிந்து கொள்ள வேண்டும்.  தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

கூட்டம் கூடுதலை தவிர்க்க வேண்டும்.  பொதுமக்களுக்கு பேரிடர் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கையேடுகள், குறும்படங்கள் மற்றும் ஒலி, ஒளி பதிவுகள் மூலம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல்.  ஏற்கனவே கண்டறிந்து வைத்துள்ள நிவாரண முகாம்கள் சமூக இடைவெளியுடன் தங்க வைக்க போதுமானதாக உள்ளதா என ஆய்வு செய்து, தேவைப்படின் நிவாரண முகாம்களின் எண்ணிக்கையை அதிகபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.  

வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பு 37 மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் சென்னை மாநகரின் 15 மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆயத்த பணிகளை கண்காணித்து அறிக்கை அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. 

மேலும், பேரிடர் காலங்களில் தகவல் தொடர்பினை துரிதப்படுத்த முன்னெச்சரிக்கை கருவிகள் (EWS)பேரிடர் குறித்த அறிவிப்பு கருவி மற்றும் TN-SMARTஎன்ற மென்பொருள் ஆகியவை கொண்டு அவசர மீட்பு முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் கடலோர அபாய குறைப்பு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. கஜா மற்றும் வார்தா புயலில் ஏற்பட்ட பாதிப்புகளால் நமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அடிப்படையில் கடலோர மாவட்டங்களில், வானிலை ஆய்வு மையம் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் அறிவுறுத்தப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்பட்டது. 

வடகிழக்கு பருவமழை காலத்தில் பொருட் சேதம் மற்றும் உயிர்சேதம் ஏற்படாமல் தவிர்க்கவும், குறைக்கவும் அனைத்து துறையினைச் சார்ந்த செயலாளர்களும், துறைத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 

மாநில மற்றும் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையம், TNSMART செயலி மற்றும் சமூக வளைதளம், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு வடகிழக்கு பருவமழை குறித்த தகவல்கள் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

மீட்புக் குழுக்கள் குறுகிய கால அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைய ஏதுவாக தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். 

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரத் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, மீன்வளத் துறை, உணவுப் பொருள் வழங்கல் துறை  மற்றும் சம்மந்தப்பட்ட துறை தலைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தலைமை செயலாளர் கேட்டுக் கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து