திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

சனிக்கிழமை, 19 செப்டம்பர் 2020      இந்தியா
Lok-Sabh 2020-09-19-1

Source: provided

புதுடெல்லி : மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த திவால் சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கின் காரணமாக பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால், அந்நிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை உள்ளது.

அந்த நிறுவனங்கள் மீது திவால் சட்டத்தின் கீழ் வங்கிகளால் நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, தொழில் நிறுவனங்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில், கடன் நொடிப்பு மற்றும் திவால் சட்டத்தில் திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 

இந்த அவசரச் சட்டம் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். விவாதத்திற்கு பிறகு மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அடுத்த 6  மாதங்கள் அல்லது அதற்கும் மேல் நீட்டிக்கப்படும் வரையிலான காலகட்டத்தில் கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் இருந்து இந்த மசோதா மூலம் தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய நிதி அமைச்சர், மார்ச் 25-ம் தேதிக்கு முன்பு வரை கடன் வாங்கி செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து