முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய அரசினர் கூர்நோக்கு இல்ல கட்டிடம்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் சென்னை, கெல்லீஸில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தங்கும் அறைகள், தொழிற்பயிற்சி கூடம், பணியாளர் அறை, சமையலறையுடன் கூடிய உணவருந்தும் கூடம் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சிறுமியர்களுக்கான அரசினர் கூர்நோக்கு  இல்லக் கட்டிடத்தை திறந்து வைத்தார்.  

சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் சென்னை, கெல்லீஸில் இயங்கி வரும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இளைஞர் நீதி குழும ஆணையின் பேரில் தங்க வைக்கப்படும் சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் சிறார்களுக்கு, தேவையான உணவு, உடை மற்றும் இதர அடிப்படை வசதிகள் வழங்கப்படுவதுடன், உளவியலாளர் மூலம் ஆற்றுப்படுத்துதல் போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றது. மேலும், இச்சிறார்களுக்கு முறைசாரா கல்வி மற்றும் தொழிற்கல்வி சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. 

சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் 2017-18ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது, சென்னை, கெல்லீஸில், சிறுமியருக்கான கூர்நோக்கு இல்லத்திற்கு தங்கும் அறைகள், சமையலறையுடன் கூடிய உணவருந்தும் கூடம், தொழிற்பயிற்சி கூடம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.  

அதன்படி, சென்னை, கெல்லீஸில் செயல்பட்டு வரும் அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு, அவ்விடத்தில் சுமார் 1554 சதுர மீட்டர் பரப்பளவில் 4 கோடியே 40 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுமியர்களுக்கான அரசினர் கூர்நோக்கு  இல்லக் கட்டிடத்தை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.  

இந்த கூர்நோக்கு இல்லம், சிறுமிகளை வயது வாரியாக பிரித்து, சிறு அலகாக ஒவ்வொரு அறையிலும் 5 சிறுமிகள் வீதம் தங்க வைக்கும் வகையில் குளியலறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கூடிய 12 தங்கும் அறைகள், சமையல் அறையுடன் கூடிய உணவருந்தும் கூடம், தொழிற்பயிற்சி / பல்நோக்கு கூடம், பணியாளர் அறை, அலுவலக அறை, மருத்துவர் அறை, குடிநீர் சுத்திகரிப்பான் (RO Plant), கண்காணிப்பு கேமராக்கள் (CCTV), கழிவு நீர் சுத்திகரிக்கும் அமைப்பு உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. 

சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையில் 2019-2020-ஆம் ஆண்டுக்கான 92 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு அமைச்சுப்பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழக முதல்வர் 7 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயக்குமார், டாக்டர் வி.சரோஜா, தலைமைச் செயலாளர் சண்முகம், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை  செயலாளர் மதுமதி, சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் லால்வேனா, சமூகநல ஆணையர் ஆபிரகாம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து