முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 மாத இடைவெளிக்கு பின் இந்திய மண்ணில் இருந்து 2 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை நவம்பரில் ஏவ இஸ்ரோ திட்டம்

திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

சென்னை : 9 மாத இடைவெளிக்கு பிறகு இந்திய மண்ணில் இருந்து நவம்பர் மாதம், 2 பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்கான பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

தற்போது நானோ வகை உள்ளிட்ட சிறிய வகை செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக சிறிய வகை ராக்கெட்டுகளையும் (எஸ்.எஸ்.எல்.வி.) தயாரித்து வருகிறது.  

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்டில் 2 பி.ஆர்.1 என்ற செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் ஜிசாட்-30 என்ற செயற்கைகோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி அதிகாலை 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, பூமி கண்காணிப்புக்காக ‘ஜிசாட்-1’ என்ற செயற்கைகோளை கடந்த பிப்ரவரி மாதம் இஸ்ரோ தயாரித்து இருந்தது. இதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி எப்-10 என்ற ராக்கெட் மூலம் கடந்த மார்ச் மாதம் 5-ம் தேதி மாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவ இருந்தனர்.

ஆனால், இறுதிகட்டப் பணியான ‘கவுண்ட் டவுன்’ தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. எனவே ராக்கெட் ஏவும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பப்பட்ட பகுதிகளில் கசிவுகள் ஏதேனும் இருக்கிறதா? என்பதையும் விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.  இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இஸ்ரோவிலும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டதால் பணிகள் முடங்கின. இதனால் ராக்கெட் ஏவும் திட்டங்கள் மற்றும் இளம் மாணவர்களுக்கான யுவிகா என்ற விஞ்ஞான திட்டங்களும் ஒத்தி வைக்கப்பட்டன. 

தற்போது 9 மாத இடைவெளிக்கு பிறகு இந்திய மண்ணில் இருந்து வருகிற நவம்பர் மாதம் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 2 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இதற்கான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து