முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக பொருளாதாரத்தை மீட்டெடுக்க அமைக்கப்பட்ட ரங்கராஜன் குழுவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி

திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் பல்வேறு துறை வல்லுனர்கள் கொண்ட நிபுணர் குழு ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், சென்னை பொருளியல் பள்ளி தலைவருமான சி.ரங்கராஜன் தலைமையில் அரசால் அமைக்கப்பட்டது.

இந்த குழு தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடியை சந்தித்து தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதை தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது இக்குழுவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோவிட்-19 ஊரடங்கால், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்வதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தலைவரும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவருமான டாக்டர் சி. ரங்கராஜன் சமர்ப்பித்தார்.

அதன் பின்னர் முதல்வர் தலைமையில் இந்த உயர்மட்டக் குழுவுடன் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 

துணை முதல்வர், தலைமைச் செயலாளர் மற்றும் தமிழகம் பொருளாதார மேம்பாடு அடைவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் ரங்கராஜன் மற்றும் குழுவில் இடம்பெற்றிருக்கின்ற உறுப்பினர்களுக்கும் இந்த ஆலோசனை நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கின்ற நிதித் துறை செயலாளருக்கும் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் என் நன்றிகலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, விரைந்து, வேகமாக எல்லா துறைகளையும் அலசி ஆராய்ந்து கிட்டத்தட்ட 250 பக்கம் கொண்ட,  என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் விரிவாக, தெளிவாக அரசுக்கு சமர்ப்பித்துள்ள  குழுவின் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் அரசின் சார்பாக முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

கொரோனா ஒரு புதிய நோய். உலகமே அச்சத்தில் இருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், தமிழகம் வளர்ச்சிப் பாதையை அடைய வேண்டும், வளர்ச்சியை நோக்கிச் செல்ல எவ்வாறு கையாள வேண்டும் போன்ற விவரங்களை உள்ளடக்கி, சுருக்கமான கருத்துக்களை இங்கே தெரிவித்திருக்கின்றீர்கள்.

அரசு அவற்றை உரியமுறையில் பரிசீலித்து, தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட விஷயங்களை உன்னிப்பாக ஆராய்ந்து தமிழகத்தின் பொருளாதாரம் மேம்பாடு அடைவதற்கும், வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்கும் உங்களுடைய கருத்துக்களை எங்களுடைய அரசு கவனமாக எடுத்துக் கொள்ளும். 

எங்களது வேண்டுகோளை ஏற்று, கொரோனா நோய்த் தொற்று இருக்கும் சோதனையான காலகட்டத்தில்கூட, அரசாங்கத்திற்கு உதவி செய்ய வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தோடு, அர்ப்பணிப்பு உணர்வோடு தங்களது சொந்தப் பணிகளையெல்லாம் விட்டு விட்டு, அரசுக்குத் துணை நின்ற மரியாதைக்குரிய இக்குழுவின் தலைவர் டாக்டர் சி.ரங்கராஜன் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து