தேசிய கல்விக் கொள்கை உலக அளவில் முதன்மை நாடாக இந்தியாவை உருவாக்கும்: பிரதமர் மோடி திட்டவட்டம்

செவ்வாய்க்கிழமை, 22 செப்டம்பர் 2020      இந்தியா
modi 2020 09 22

Source: provided

புதுடெல்லி : தேசிய கல்விக் கொள்கை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலக அளவில் முதன்மையான நாடாக இந்தியாவை உருவாக்குவதாகவும் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

கவுகாத்தி ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றினார்.  அப்போது ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிலையங்கள் இன்றைய காலகட்டத்தில் முன்னேறி வருவது குறித்து பிரதமர் பெருமை தெரிவித்தார்.

சேவையாற்றுவதில் புதுமை சிந்தனையைப் பயன்படுத்துவது என்ற எண்ணம் தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாட்டை துடிப்புடன் வைத்திருக்கிறது என்று அவர் கூறினார்.

எதிர்கால சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான வகையில் தங்களை இளைஞர்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இளைஞர்களின் கனவுகளும், உயர் விருப்ப லட்சியங்களும் தான் இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவையாக இருக்கும் என்றார் அவர். இந்தத் திசையை நோக்கி கவுகாத்தி ஐ.ஐ.டி. ஏற்கெனவே முயற்சிகள் மேற்கொண்டு வருவது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். 

இந்த நோய்த் தொற்று காலத்தில் வகுப்புகளை நடத்துவதிலும், ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்வதிலும் சிரமங்கள் உள்ள நிலையிலும் தற்சார்பு கொண்ட இந்தியாவை உருவாக்குவதில் ஐ.ஐ.டி மேற்கொண்டுள்ள முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்.

21 ஆம் நூற்றாண்டின் தேவைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப் பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை 2020, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலக அளவில் முதன்மையான நாடாக இந்தியாவை உருவாக்குவதாகவும் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். பன்முகக் கல்வி கற்கும் வசதி தேசிய கல்விக் கொள்கை 2020-ல் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வெவ்வேறு பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ள வாய்ப்பு கிடைப்பதுடன், எத்தனை முறை வேண்டுமானாலும் கல்வி கற்பதில் இருந்து விலகி, மீண்டும் சேரும் வசதி இதில் இருப்பதாகப் பிரதமர் கூறினார். 

ஆராய்ச்சிக்கு நிதி அளிப்பது தொடர்பாக நிதி அமைப்புகளுடன் நல்ல ஒருங்கிணைப்பு செய்வதற்காகவும், அறிவியல் அல்லது மானுடவியல் சார்ந்த எல்லா படிப்புகளுக்கும் நிதி அளிப்பதற்காகவும் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை தொடங்குவதற்கு தேசிய கல்விக் கொள்கையில் திட்டங்கள் உள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். 

வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் கல்வி நிலையம் தொடங்க இதில் அனுமதிக்கப்படுவதால், இந்திய மாணவர்களுக்கு சர்வதேச கல்வி வாய்ப்பு கிடைக்கும் என்றார் பிரதமர். உலகில் கல்விக்கான தேடலில் முக்கிய மையமாக இந்தியாவை உருவாக்க தேசிய கல்விக் கொள்கை உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து