முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரம்மோற்சவ விழா: திருப்பதியில் இன்று ஜெகன்மோகன், எடியூரப்பா தரிசனம்

புதன்கிழமை, 23 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருமலை : திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை நேற்று கோலாகலமாக நடந்தது. இன்று (வியாழக்கிழமை) காலை 6.25 மணிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோர் வி.ஐ.பி. தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நான்கு மாட வீதிகளில் வாகன சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அனைத்து வாகனங்களில் உற்சவர்கள் கோவிலில் உள்ள கல்யாண உற்சவ மண்டபம் மற்றும் ரெங்கநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலித்தனர்.  

4-வது நாளான நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு கற்பக விருட்ச வாகனத்தில் உற்சவரான மலையப்ப சாமி கோபண்ணா அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார்.

இரவு 7 மணிக்கு சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சாமி அருள்பாலித்தார்.  நிகழ்ச்சியில் கோவில் முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி, கூடுதல் முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலை, கிளி, ஆண்டாள் அணிந்திருந்த வஸ்திரம் ஆகியவற்றை இணை ஆணையர் தனபால், கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் திருமலை தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். 

பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை நேற்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நடந்தது. முன்னதாக காலை பல்லக்கு உற்சவத்தில் மோகினி அலங்காரம் நடந்தது. 

கருடசேவையின் போது அரசு சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். இதையொட்டி ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தார்.

இன்று (வியாழக்கிழமை) காலை 6.25 மணிக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோர் வி.ஐ.பி. தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து