முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு: 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்: தலைமை தேர்தல் ஆணையர் அரோரா தகவல்

வெள்ளிக்கிழமை, 25 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.

பீகாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.  243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபையின் பதவி காலம் வருகிற நவம்பர் 29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. 

இதனை முன்னிட்டு சட்டசபை தேர்தலை நடத்துவது பற்றி இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவிப்பு வெளியிட்டார். 

அவர் செய்தியாளர்களிடையே பேசும்பொழுது, கொரோனா பாதிப்பு காரணமாக 70 நாடுகள் தேர்தலை தள்ளி வைத்துள்ளன.  பீகார் தேர்தலை நடத்த அதிக மனிதவளம், கட்டமைப்பு தேவைப்படுகிறது. 

வாக்காளர்கள் நெரிசல் இல்லாமல் வாக்களிக்கும் வகையில் பீகார் தேர்தல் வாக்களிப்பு நேரம், ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படுகிறது.  1,500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்பது, ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு மையம் என நிர்ணயம் செய்யப்படும். 

இதன்படி, காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைவதற்கு பதிலாக, காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்கு பதிவு நடைபெறும்.  எனினும், மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்நேர நீட்டிப்பு இருக்காது. 

பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறும்.  முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறும்.  2-வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ம் தேதியும், 3-வது கட்டமாக 78 தொகுதிகளுக்கு நவம்பர் 7-ம் தேதியும் தேர்தல் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

பீகாரில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தேர்தலை பாதுகாப்புடன் நடத்துவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய தேவையாக உள்ளது.

கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கையுடன் கூடிய வாக்களிப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  இதன்படி, 7 லட்சம் சேனிட்டைசர்கள், 46 லட்சம் மாஸ்குகள், 6 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பி.பி.இ.), 6.7 லட்சம் முக கவசங்கள், 23 லட்சம் (ஜோடி) கையுறைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 

இதேபோன்று வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ஒரு முறை பயன்படுத்தப்படும் 7.2 கோடி கையுறைகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து