அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 30-ம் தேதி வரை நீட்டிப்பு

சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2020      தமிழகம்
Colleges 2020 09 26-1

Source: provided

சென்னை : அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகக் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 128 வகையான இளநிலை பட்டப் படிப்புகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு, இணைய வழியில் 3.12 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அதில் 2.25 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து, கல்லூரி அளவிலான தரவரிசை வெளியிடப்பட்டு முதல்கட்ட மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி கடந்த 4-ம் தேதி வரை நடந்தது.

இதில் சுமார் 70 ஆயிரம் இடங்கள் நிரம்பி உள்ளன. மீதமுள்ள இடங்களை நிரப்பக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகக் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை விரைந்து நடத்துமாறு முதல்வர்களை அறிவுறுத்தியுள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரகம், அக்டோபர் முதல் முதுகலை மாணவர் சேர்க்கையை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து