இலங்கையுடன் புத்தமத உறவுகளை மேம்படுத்த ரூ.110 கோடி நிதி உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு

சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2020      இந்தியா
Modi-Rajapatse 2020 09 26

Source: provided

புதுடெல்லி : இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

இலங்கை, இந்தியா இடையிலான புத்தமத ரீதியிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.110 கோடி) மானிய உதவி வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார்.

இந்தியா - இலங்கை இடையேயான உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர். இலங்கை பிரதமராக ராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவது இதுதான் முதல் முறையாகும். 

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனையின் போது,  இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை  கூறினார்.

மேலும், தனது அழைப்பை ஏற்று, இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையேயான மெய்நிகர் உச்சி மாநாடு நடத்த ஒப்புதல் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்ட  பிரதமர் மோடி,  இந்தியா - இலங்கை இடையேயான உறவுகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

அண்டை நாட்டுக்கு  முதல் முன்னுரிமை என்ற கொள்கையின் படியும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய கோட்பாட்டின் படியும் எங்கள் அரசு, இலங்கை அரசுடனான உறவுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கிறது என்று கூறினார். 

தொடர்ந்து பேசிய இலங்கை பிரதமர் ராஜபக்சே, கொரோனா பெருந்தொற்று சூழலில், பிற நாடுகளுக்காகவும் இந்தியா செயலாற்றியதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்.டி நியூ டைமண்ட் கப்பலில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணி,  இரு நாடுகளுக்கும் இடையேயான பெரும் ஒத்துழைப்பு வழங்குவதற்கான வாய்ப்பாக அமைந்தது என்று தெரிவித்தார். 

இலங்கை, இந்தியா இடையிலான புத்தமத ரீதியிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.110 கோடி) மானிய உதவி வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார்.

இத்தகவலை வெளியுறவுத் துறையின் இந்தியப் பெருங்கடல் பிராந்தியப் பிரிவு இணைச் செயலாளர் அமித் நரங் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து