மாநிலங்களின் ஜி.எஸ்.டி. இழப்பீடு: மத்திய அரசு மீது சி.ஏ.ஜி., புகார்

சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2020      இந்தியா
central-government 2020 09 26

Source: provided

புதுடெல்லி : மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய, ஜி.எஸ்.டி., இழப்பீட்டு தொகையில், 47 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக தரப்பட்டுள்ளதாக, மத்திய அரசு மீது சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து சி.ஏ.ஜி., அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜி.எஸ்.டி., அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்படக் கூடிய வரி வருவாய் இழப்பை ஈடு செய்ய, கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இதன்படி வசூலிக்கப்படும் தொகை, ஜி.எஸ்.டி., இழப்பீட்டு நிதியத்தில் சேர்க்கப்பட்டு, மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த வகையில், 2017 - 18ம் நிதியாண்டில், இழப்பீட்டு நிதியத்தில், 62 ஆயிரத்து, 612 கோடி ரூபாய் சேர்ந்துள்ளது.

அதில், மாநிலங்களுக்கு, 56 ஆயிரத்து 146 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, 2018 - 19ம் நிதியாண்டில், ஜி.எஸ்.டி., இழப்பீட்டு நிதியத்தில் 95 ஆயிரத்து 81 கோடி ரூபாய் சேர்ந்துள்ளது.

அதில், 54 ஆயிரத்து, 275 கோடி ரூபாய் மட்டுமே மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி., இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் இரு நிதியாண்டுகளில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய 47 ஆயிரத்து 272 கோடி ரூபாய், மத்திய நிதி தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. 

அதன்பின், இத்தொகை, மானிய உதவி திட்டங்களின் கீழ், மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., இழப்பீட்டை ஈடுசெய்ய வரி வசூலித்து அதை மாநிலங்களின் மானிய திட்டங்களுக்கு வழங்கியிருப்பது ஜி.எஸ்.டி. இழப்பீட்டு வரி சட்டப்படி விதிமீறல். ஜி.எஸ்.டி., இழப்பீட்டு வரியை பெறுவது மாநிலங்களின் உரிமை. அதை மாநில நிவாரண உதவிகளுக்கு வழங்கப்படும் மானியமாக கருத முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து