முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தொற்று தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும்: ஐ.நா. சபையில் இங்கிலாந்து பிரதமர் பேச்சு

திங்கட்கிழமை, 28 செப்டம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : பலகட்ட சோதனைகளில் வெற்றி பெற்று தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி, எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று ஐ.நா. சபையில் இங்கிலாந்து பிரதமர் பேசினார்.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 

நான் இப்போது பேசிக் கொண்டிருக்கும் போது, உலக அளவில் சுமார் 100 கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கும் தடுப்பூசி, 3-ம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது.  அது வெற்றிகரமாக அமைந்தால், அஸ்ட்ராசெனிகா நிறுவனம் கோடிக்கணக்கான டோஸ் தடுப்பூசி தயாரித்து, வினியோகிக்க தயாராக உள்ளது. 

மேலும், 100 கோடி டோஸ் தடுப்பூசிகளை குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கு வினியோகிக்க இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட தடுப்பூசி, எல்லா நாடுகளுக்கும் சமமாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால், மற்ற நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைத்து அவை ஆரோக்கியமாக இருந்தால்தான், ஒவ்வொரு நாடும் ஆரோக்கியமாக இருக்கும்.  கடந்த 9 மாதங்களாக கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறோம்.

இந்த பொது எதிரியை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட வேண்டும்.  கொரோனா வைரஸ் எப்படி உருவானது? எப்படி பரவியது என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும். எந்த நாட்டையோ, எந்த அரசையோ குறை கூறுவது எனது நோக்கம் அல்ல. ஒரு முன்னாள் கொரோனா நோயாளி என்ற முறையில், இதை அறிந்து கொள்வது எனது உரிமை.

அதன்மூலம், இது மறுபடியும் தாக்காதவாறு நம்மால் இயன்ற அளவுக்கு நாம் கூட்டாக போராட முடியும்.  உலக சுகாதார நிறுவனத்துக்கு இங்கிலாந்து 34 கோடி பவுண்டு நிதி உதவி அளித்துள்ளது.  இவ்வாறு போரிஸ் ஜான்சன் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து