துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020      தமிழகம்
ops 2020 09 29

Source: provided

சென்னை : துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது வீட்டில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அ தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர், கட்சி வளர்ச்சிப்பணிகள், பொதுக்குழு நடத்துவது, கட்சியின் வழிகாட்டு குழு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து வருகிற அக்டோபர் 7ந்தேதி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் இணைந்து, இதே தலைமைக் கழகத்தில் அறிவிப்பார்கள் என்று கூறினார்.

இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது நிர்வாகிகளுடன் நேற்று காலை ஆலோசனை நடத்தினார்.

இதில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைப்பு செயலாளர் மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் உடனான ஆலோசனைக்கு பிறகு வெளியே வந்த அண்ணா தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், கட்சி வளர்ச்சிக்காக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும், வரும் 2021ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று அதி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் இடையே எந்த குழப்பமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறுகையில், இந்த சந்திப்பு கட்சி பணி பற்றியது தான் என்று கூறினார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை நேற்று திடீரென சந்தித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து