முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு தரவேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ.10,774கோடியினை விரைந்து வழங்கிட வேண்டும் : ஜி.எஸ்.டி. கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்

திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்திற்கு தரவேண்டிய இழப்பீட்டுத் தொகை ரூ.10,774கோடியினை விரைந்து வழங்கிட வேண்டும் என்று நடைபெற்ற ஜி.எஸ்.டி. கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்ககுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் 12.10.2020 அன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்ற 42-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற தொடர்ச்சி கூட்டத்தில் ஆற்றிய உரை வருமாறு:-

மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை வழங்குவது குறித்தான விவகாரத்திற்கு ஒரு சுமூக முடிவினை காண்பதற்கு தாங்கள் எடுத்துவரும் முயற்சிக்கு என் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

27.8.2020 அன்று நடைபெற்ற சரக்குகள் மற்றும் சேவைகள் மன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கு இணங்க மத்திய நிதியமைச்சகம் ஒரு விளக்கக் குறிப்பு ஒன்றினை மாநிலங்களுடன் பகிர்ந்துகொண்டது. 

அதில், இழப்பீடு தொடர்பாக ஏற்படக்கூடிய பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வது தொடர்பான முறையினை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றம் முடிவு செய்யவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் இது தொடர்பான தனது கருத்தினை வழங்கியுள்ளார். மேலும் அவர் மாநிலங்களுக்கு முழு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சகத்திடமிருந்து வரப்பெற்ற விளக்கக் குறிப்பில் இழப்பீடு தொகையினை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது குறித்தான பல வழிமுறைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. 

அதில், மத்திய அரசு கடன் பெற்று இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்பது ஒரு வழிமுறையாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், சில காரணங்களுக்காக அவ்வாறு மத்திய அரசால் கடன் பெறுவது சாத்தியமில்லை என அந்த விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆகையால், இரண்டு விருப்பத் தேர்வுகள் மட்டும் வழங்கப்பட்டன. அவ்விரண்டு விருப்பத் தேர்வுகளிலும், மாநிலங்கள்தான் கடன் பெற்றாக வேண்டிய வழிமுறை குறிப்பிடப்பட்டிருந்தது.

மத்திய அரசுதான் கடன் பெற்று மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையினை வழங்கிட வேண்டும் என்ற தமிழ்நாட்டின் விருப்பத் தேர்வு ஏற்கப்படவில்லை. மத்திய அரசுதான் கடன் பெற வேண்டும் என நானும் அந்த நேரத்தில் வேண்டுகோள் வைத்திருந்தேன். முதலமைச்சரும் இப்பொருள் குறித்து பாரத பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு கடன்  பெற்றுதர முன் வராத காரணத்தினால், முன்வைக்கப்பட்ட இரண்டு விருப்பத் தேர்வுகளில் ஏதேனும் ஒரு விருப்பத் தேர்வினை மட்டுமே தமிழகம் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது. 

கோவிட்-19 பெருந்தொற்று நிலவி வரும் இந்த தருணத்தில், ஒருமித்த கருத்து எட்டப்படவேண்டும் என்பதில் தமிழக அரசு கவனம் கொண்டுள்ளது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் இதற்கு முன் நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் 1-ஆம் விருப்பத் தேர்வினை ஏற்க வேண்டியிருந்தது. இந்த விவகாரத்திற்கு விரைந்து தீர்வு கண்டு, மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியினை வழங்கினால், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான காலகட்டத்தில் பொருளாதாரத்தை உடனடியாக புதுப்பிக்க இயலும். சென்ற வாரம் ரூ.1483.96 கோடி இழப்பீட்டு தொகையாக தமிழகத்திற்கு வழங்கியமைக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜூலை, 2020 முடிய தமிழகத்திற்கு வரப்பெறவேண்டிய இழப்பீட்டுத் தொகையான ரூ.10774.98 கோடியினை விரைந்து வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

2017-2018 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தீர்வு நிலுவைத் தொகையான ரூ.4321 கோடியை தமிழகத்திற்கு விரைவில் வழங்கிட உறுதியளித்துள்ள மன்றத் தலைவருக்கு இத்தருணத்தில் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து