முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல்நலக்குறைவால் மரணமடைந்த தாயார் உடலுக்கு முதல்வர் எடப்பாடி கண்ணீர் அஞ்சலி: இறுதி சடங்கில் அமைச்சர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 13 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சேலம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (வயது 93) உடல்நலக்குறைவால் நேற்று அதிகாலை காலமானார். அவரது உடல் நேற்று  காலை தகனம் செய்யப்பட்டது. 

அமைச்சர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான பேர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து கார் மூலம் சேலம் சென்று முதல்வரின் தாயார் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் கூறினார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுஞ்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட, சிலுவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர் மனைவி தவுசாயம்மாள். தமிழக முதல்வரின் தாயாரான இவர், வயது முதிர்வால் உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை ஒரு  மணியளவில் காலமானார். 

இதனையடுத்து அவரது உடல் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தாயாரின் மறைவு செய்தியறிந்து முதல்வர்   எடப்பாடி பழனிசாமி அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு சென்னையிலிருந்து காரில் சிலுவம்பாளையம் கிராமத்திற்கு வந்தார்.

பின்னர் தனது தாயாரின் உடலுக்கு அவர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயம்மாள் உடலுக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சியினர், தொண்டர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமான பேர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

முதல்வரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், டாக்டர் வி.சரோஜா, எம்.சி.சம்பத், இரா.காமராஜ், கே.சி.கருப்பணன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், கே.சி.வீரமணி, கே.டி.ராஜேந்திர பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி எம்.பி. ஆகியோர் நேரில் சென்று, அஞ்சலி செலுத்தி, முதல்வருக்கு ஆறுதல் கூறினர். மேலும் சேலம் மாவட்ட கலெக்டர் ராமன், ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன், தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏ.டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 

முதல்வர்  எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவையொட்டி கவர்னர் பன்வாரிலால் புரோகித், தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ச. ராமதாசு, திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ஆகியோர் தொலைபேசி மூலமாக முதல்வரை தொடர்பு கொண்டு தங்களது இரங்கலை தெரிவித்து, ஆறுதல் கூறினார்கள்.

காலை 8 மணியளவில் சிலுவம்பாளையம் வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட தவுசாயம்மாள் உடல், அப்பகுதியில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், கிராம மக்கள் என திரளானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.  

தவுசாயம்மாளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோவிந்தராஜ் ஆகிய 2 மகன்களும், ரஞ்சிதம் (எ) விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். கணவர் கருப்ப கவுண்டர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 

மறைந்த தவுசாயம்மாள் சாதாரண விவசாய குடும்பத்திலிருந்து, தன்னுடைய 2 மகன்கள் மற்றும் மகளை நன்கு படிக்க வைத்தார். அத்துடன் விவசாயத்தில் நல்ல ஆர்வம் கொண்டு விவசாயம் மேற்கொண்டார்.

எப்பொழுதும் குடும்ப நலனில் அக்கறை கொண்டவர். எந்தவிதமான பிரச்சினைகளுக்கும் செல்லாமல் தான் உண்டு, தனது குடும்பம் உண்டு என்பதை எண்ணி வாழ்ந்தார்.  

குறிப்பாக, தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி அரசியலுக்கு முதன்முதலாக வந்த பொழுது அவருக்கு ஆதரவாகவும் இருந்தார்.  தனது மகன் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் சரி, அமைச்சராக இருந்தபோதும் சரி, முதல்வராக இருக்கும்போதும் சரி, எதைப் பற்றியும் எவரிடமும் பெருமைப்படுத்திக் கொள்ளாமல் எப்பொழுதும்போல் அக்கம் பக்கத்திலுள்ள கிராம மக்களிடமும் உறவினர்களிடமும் நன்றாக பழகி வந்தார். அவர் குடும்பத்திலுள்ள அனைவரிடமும் பாசத்துடன் இருப்பார். குறிப்பாக தனது இளைய மகன் எடப்பாடி பழனிசாமியிடத்தில் அதிக பாசம் கொண்டவர். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடைசியாக தனது மகனைப் பற்றி கூறியதாவது:-

என் மகன் எடப்பாடி பழனிசாமி, சிறு வயது முதல் ஏழை, எளிய மக்களோடு பழகி பொது மக்களின் இன்ப, துன்பங்களை நன்கு உணர்ந்தவன். எனவே மக்களுக்கு நல்லாட்சி தருவான்.  கோனேரிப்பட்டி அரசு பள்ளியில் படித்த என் மகன், அப்போது நாங்கள் குடியிருந்த விவசாயத் தோட்டத்திற்கும், பள்ளிக்கும் 4 மைல் தொலைவிருக்கும். தினசரி நடந்து போய் படித்து வந்தான். 

பள்ளி படிப்பை முடித்து குமாரபாளையம் அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்தான்.  தினசரி காவிரி ஆற்றை கடந்து கல்லூரிக்கு சென்று சிரமப்பட்டான். எல்லா கஷ்டமும் தெரிந்தவர் என் மகன். ஏழை, எளிய விவசாய மக்கள் படும் பல்வேறு சிரமங்களை நன்கு உணர்ந்து அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் விதமாக செயல்படுவான். விவசாயத்தை மூச்சாய் நினைப்பவன், நிச்சயம் இறைவன் அருள் புரிவார் என்று நம்பிக்கையில் நானும் வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து