முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு பணிகள் கவர்னரின் முடிவை பொறுத்தே நடைபெறும்: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு பதில்

வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : கவர்னரின் முடிவை பொறுத்தே மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று ஐகோர்ட் மதுரைக்கிளையில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

அரசு பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதி மருத்துவப் படிப்புகளில் சேர இருக்கும் மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடாக 7.5 சதவீதம் வழங்க வேண்டும் என்ற சட்ட மசோதாவை இந்த வருடமே அமல்படுத்த வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு தெரிவித்த தகவல்களைக் கேட்ட நீதிபதி கிருபாகரன் கண்கலங்கினார். 

வழக்கு விசாரணையின் போது பேசிய அவர், கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிட முடியாதது. அவர்கள் தாங்கள் மருத்துவராகி கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை புரிய வேண்டும் என்ற கனவோடு படிக்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது என்பது மிகவும் வேதனைக்குரியது என்று கண்கலங்கியபடி தனது கருத்தை தெரிவித்தார்.

நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பாகவே இடஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தமிழக அமைச்சரவை இந்த மசோதாவை தமிழக கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது. தற்போது வரை அந்த சட்ட மசோதா கவர்னரின் பரிசிலனையில்தான் உள்ளது. எனவே இது குறித்து கவர்னரிடம் கேட்டு பதில் தெரிவிக்குமாறு, கவர்னரின் செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால் நீதிமன்றம் கவர்னருக்கு உத்தரவிட இயலாது என்றும் காலக்கெடுவையும் விதிக்க இயலாது என்றும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போதுதான் நீதிபதி கண் கலங்கி மேற்கண்ட கருத்தைத் தெரிவித்தார். 

இதனையடுத்து நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு எப்போது மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடக்கும்? மருத்துவக் கல்லூரி இடங்கள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு எப்போது வெளியிடும்? என்பது குறித்து அரசிடம் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை நேற்றைய தினம் மதியம் ஒரு மணிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். 

இந்நிலையில் இது குறித்து நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதில் மனுவில் கவர்னரின் முடிவை பொறுத்தே மற்ற பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின. இணையதளத்தின் மூலம் இந்த முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து