முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய - சீன உறவில் மிகப்பெரும் பாதிப்பு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : கிழக்கு லடாக்கில் இந்திய-சீன ராணுவம் இடையே கடந்த மே மாதம் முதல் அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகிறது. இதில் ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதங்களும் நிகழ்ந்தன.

இந்த மோதல் சம்பவங்களால் இரு தரப்பும் எல்லையில் படைகளை குவித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளன. இதனால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக லடாக்கின் கிழக்கு எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் லடாக் மோதலால் இந்தியா-சீனா இடையிலான உறவு மிகவும் மோசமாக பாதித்து உள்ளதாக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஆசிய சமூக கொள்கை நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்வில் மெய்நிகர் முறையில் உரையாற்றும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தியா கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவுடன் நல்ல உறவை கட்டமைத்து இருந்தது. அசல் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைதியும், நிலைத்தன்மையுமே அந்த உறவை கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாகும்.

இதற்காக 1993-ம் ஆண்டு முதல் ஏராளமான ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளன. அவற்றின் மூலம் அமைதி மற்றும் நிலைத்தன்மை பராமரிக்கப்பட்டதுடன், எல்லைக்கு குறைவான எண்ணிக்கையில் படைகளை அனுப்புவது, எப்படி எல்லையை நிர்வகிப்பது? எல்லையில் இருதரப்பும் நெருங்கி வரும்போது எத்தகைய அணுகுமுறையை கடைப்பிடிப்பது? என்பது உள்ளிட்ட அம்சங்கள் வகுக்கப்பட்டு இருந்தன.

அந்தவகையில் கருத்தியல் மட்டத்தில் இருந்து நடத்தை நிலை வரை ஒட்டுமொத்த நடவடிக்கைகளுக்கும் வழிமுறைகள் வகுக்கப்பட்டு இருந்தன.

ஆனால் இந்த ஆண்டு ஒட்டுமொத்த ஒப்பந்தங்களும் செயலிழந்து போயிருப்பதையே நாம் பார்க்கிறோம். எல்லையின் பல்வேறு பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சீன படைகள் குவித்திருப்பது ஒட்டுமொத்தமாக இந்த ஒப்பந்தங்களுக்கு எதிராக உள்ளது.

இப்படி சர்ச்சைக்குரிய பகுதிகளில் அதிக அளவில் படைகளை குவித்தால், இருதரப்பும் ஒருவருக்கொருவர் நெருங்கி வரும்போது, கடந்த ஜூன் 15-ந் தேதி (கல்வான் பள்ளத்தாக்கு மோதல்) சம்பவம் போல பயங்கரமான நிகழ்வுகள்தான் நடந்தேறும். அந்த பெருங்கொடுமையை அடிக்கோடிட்டுக்காட்ட வேண்டுமென்றால், 1975-ம் ஆண்டுக்கு பிறகு நடந்த ராணுவ மோதலும், உயிரிழப்பும் அதுவாகும்.

இதன் மூலம் என்ன கிடைத்திருக்கிறது? மிகவும் ஆழமான பொது விளைவு, மிகப்பெரிய அரசியல் தாக்கம் மற்றும் இருதரப்பு உறவில் மிகப்பெரிய பாதிப்பு போன்றவையே வெளிப்படையாக நடந்துள்ளது.

இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து