ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் சாதனை: துணை முதல்வர் ஓ.பி.எஸ். வாழ்த்து

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      தமிழகம்
OPS 2020 10 17

Source: provided

சென்னை : ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஜீவித் குமார், 2020 நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார். அவருக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தேனி அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஜீவித் குமார், நடந்து முடிந்த நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார். அகில இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடமும் பெற்றுள்ளார். மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வு முகமை நேற்று முன்தினம் (அக்.16) மாலை வெளியிட்டது. தேர்வு எழுதிய 14 லட்சம் மாணவர்களில் மொத்தம் 7,71,500 பேர் (56.44 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோயில் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜன் 710 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவித் குமார், 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தேசிய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடமும் பெற்றுள்ளார்.  

பெரியகுளம் அருகே சில்வார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவித் குமார். இவரின் தந்தை நாராயணசாமி, ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளி. தாய் தையல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்த ஜீவித் குமார், 2019-ம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில், இந்த ஆண்டு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் அகில இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களிடையே முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இதுகுறித்து ஜீவித் குமார் அரசுப் பள்ளி மாணவர்கள் முயன்றால் முடியாது எனப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.  நீட் தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமாருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து