கிசான் ரயில் சரக்கு கட்டணத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம்

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      இந்தியா
Apple 2020 10 17

Source: provided

புதுடெல்லி : கிசான் ரயில் சேவையை பயன்படுத்தும் விவசாயிகளை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், குறிப்பிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு சரக்கு கட்டணத்தில் 50 சதவீத மானியம் அளிக்கப்படுகிறது.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும், விவசாயிகளின் விளைபொருட்கள் விரைவாக சந்தைகளை சென்றடையும் வகையிலும் கிசான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்த சரக்கு ரயில் சேவையை பயன்படுத்தி பயன் அடையும்படி விவசாயிகளுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.  

இந்நிலையில் கிசான் ரெயில் சேவையை பயன்படுத்தும் விவசாயிகளை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், மத்திய ரயில்வே அமைச்சகமும், உணவு பதப்படுத்துதல் அமைச்சகமும் இணைந்து குறிப்பிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு சரக்கு கட்டணத்தில் 50 சதவீத மானியம் அளிக்கிறது. இந்த மானியத் தொகையை உணவு பதப்படுத்துதல் அமைச்சகம், ரயில்வே அமைச்சகத்திற்கு வழங்கும். இந்த மானியத் திட்டம் கடந்த 14-ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.  

அதன்படி மாம்பழம், சாத்துக்குடி, வாழைப்பழம், கொய்யா, பப்பாளி, ஆரஞ்சு, எலுமிச்சை, லிச்சி, கிவி, அன்னாசி, மாதுளை, பலாப் பழம், பேரிக்காய், ஆப்பிள் மற்றும் பாதாமும், பீன்ஸ், பாகற்காய், கத்திரிக்காய், குடமிளகாய், தக்காளி, பச்சை மிளகாய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், பூண்டு, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி போன்ற காய்கறிகளும் மானியம் பெற தகுதியுள்ள பொருட்களாகும். வேளாண் அமைச்சகம் அல்லது மாநில அரசுகளின் கோரிக்கையை பரிசீலித்து, எதிர்காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து