அ.தி.மு.க. 49-வது ஆண்டு துவக்க விழா: கட்சி கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.

சனிக்கிழமை, 17 அக்டோபர் 2020      தமிழகம்
OPS 2020 10 17-1

Source: provided

சென்னை : அ.தி.மு.க. 49-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு நேற்று காலை (17.10.2020 - சனிக் கிழமை) கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள தலைமைக் கழகத்திற்கு வருகை தந்து, எம்.ஜி.ஆர்.,  அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கழகக் கொடியினை ஏற்றி வைத்தார். அதை தொடர்ந்து அங்கு திரளாகக் குழுமியிருந்த  நிர்வாகிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், உடன்பிறப்புகளுக்கும் இனிப்பு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து,  துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அம்மாவின்  பொற்கரங்களால் கல்வி நிதியுதவி பெற்றவர்கள் உட்பட, MBBS இறுதி ஆண்டு படித்து வரும் 22 மாணவ, மாணவியர், MBBS இரண்டாம் ஆண்டு படித்து வரும் ஒரு மாணவி, BDS மற்றும் பொறியியல் இறுதி ஆண்டு படித்து வரும் 5 மாணவ, மாணவியர் என  28 பேருக்கு அ.தி.மு.க. கணக்கில் இருந்து மொத்தம் 26,39,778/- ரூபாய்க்கான வரைவோலைகளை, சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியரிடம் நேரில் வழங்கி, சிறந்த முறையில் கல்வி பயின்று வீட்டுக்கும், நாட்டுக்கும் சேவைகள் பலவற்றை செய்திட வேண்டும் என்று  நல்லாசி கூறினார். 

இதில் தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.    அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு தலைமைக் கழக வளாக நுழைவு வாயிலில் வரவேற்பு முகப்பு அமைக்கப்பட்டும், சாலையின் இரு மருங்கிலும் கட்சிக் கொடித் தோரணங்கள் அழகுற அமைக்கப்பட்டும், மங்கள இசை முழங்கவும் விழாக் கோலம் பூண்டிருந்தன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து