Saraswati 2020 10 19

Source: provided

சிவனுக்கான ஒரு ராத்திரி சிவராத்திரி. அன்னை பார்வதிக்கான ஒன்பது ராத்திரி நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களும் அன்னையை எந்த அம்சமாக கொண்டாட வேண்டும் என்பதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். 

நவராத்திரி பூஜை மட்டும் ஏன் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என வணங்குகின்றனர் என்ற கேள்வி எழுவது இயல்பு. கலைமகளுக்குத்தானே முதல் பூஜை செய்யவேண்டும். ஏன் இங்கே அலைமகளுக்கு முதல் பூஜை என்ற கேள்வி நியாயப்படி எழுவது இயல்பு. சிருஷ்டி, வரிசைப்படி பார்த்தால் முறையே சரஸ்வதி, லட்சுமி, துர்கை என்றுதான் வரும். ஆனால் நவராத்திரியின்போது மட்டும் ஏன் இந்த முறை மாற்றமடைந்து, துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று வணங்குகிறோம்.  

துர்க்கையே முதல் மகளாக இருப்பதால், நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்க்கை இடம் பெற்று நம் துயர் துடைக்கிறாள். நவராத்திரியின் போது துர்க்கையை முதலில் பூஜிக்கிறோம் என்பதுதான் காரணம். ராத்திரிக்கு அதிதேவதை துர்க்கை. அகத்தையும், புறத்தையும் அழகுப்படுத்தித் தூய்மைப்படுத்துவதற்காக துர்க்கை முதலில் வருகிறாள்.

நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி ஒன்பது நாட்களும் தினமும் பகலில் ஆயிரெத்தெட்டு சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும். நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.  நவராத்திரி நாட்களில் வீட்டில் கோலமிடுவதற்கு சுண்ணாம்பு மாவை பயன்படுத்தக் கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்தித்தான் கோலமிட வேண்டும். இவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும் என்பது ஐதீகம். நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார். 

9 நாட்களும் அம்மனை வழிபடும் முறைகளாவது, 

1. பிரதமை - புரட்டாசியில் வரும் மகாளயபட்ச அமாவாசைக்கு அடுத்த நாளாகிய பிரதமை திதியிலிருந்து துவங்கி நவமி வரையாகிய ஒன்பது நாட்களும் பல்வேறு ரூபங்களில் அம்பிகை நமக்கு அருள்பாலிக்கிறாள். நவராத்திரியின் முதல் நாள் தேவியான மகேஸ்வரி பாலா, மது கைடபர் அழிவுக்குக் காரணமான தேவி. அன்றைய தினம் அவளை மல்லிகை, வில்வம் கொண்டு அலங்கரிக்க வேண்டும். வெண் பொங்கல் நைவேத்தியம் செய்யலாம்.

2. துவிதியை - இரண்டாம் நாள் கவுமாரி தேவியாக போற்றப்படுகிறாள். அவளே ராஜ ராஜேஸ்வரியாகவும் ஆராதிக்கப்படுகிறாள். முல்லை, துளசியால் அலங்காரம் செய்து புளியோதரை நிவேதனம் பண்ண வேண்டும்.

3. திரிதியை - மூன்றாவது நாளுக்கு உரியவாராகி அன்னை, கன்யா கல்யாணி என்று அழைக்கப்படுகிறாள். செண்பகம் மற்றும் சம்பங்கிகள் இவளுக்கு உகந்தவை. சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட வேண்டும்.

4. சதுர்த்தி - நான்காம் நாளில் அருள்பவள் மகாலட்சுமி. இவள் ரோகிணி என்று அழைக்கப்படுகிறாள். மல்லிகை பூக்களால் அலங்காரம் செய்து, அன்னம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

5. பஞ்சமி - ஐந்தாம் நாள் வைஷ்ணவியாகவும், மோகினியாகவும் அலங்கரிப்பர். முல்லைப்பூ அலங்காரமும் தயிர் சாதமும் இவளுக்கு ஏற்றவை.

6. சஷ்டி - ஆறாவது நாளுக்குரிய தேவி வடிவம் இந்திராணி. அன்று சர்ப ராஜ ஆசனத்தில் தேவி அமர்ந்திருக்கும் கோலத்தில் பூஜை செய்வது வழக்கம். தேவிக்கு ஜாதி மலரே உகந்தது. இவள் விரும்புவது தேங்காய் சாதம்.

7. சப்தமி - ஏழாம் நாள், தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள். இந்த அன்னைக்கு தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்து வழிபடலாம்.

8. அஷ்டமி - எட்டாவது நாள் தேவியானவள் நரசிம்மிதருமி. நரசிம்மி வடிவின் சினம் தணிந்த கோலம் இது. அன்று அன்னை அன்பே உருவாக அருள்பாலிக்கிறாள். இவளுக்கு உகந்த ரோஜா மலரை சூடி, சர்க்கரை பொங்கல் படையல் இட்டு வழிபடலாம்.

9. நவமி - ஒன்பதாம் நாள் அம்பிகை, சாமுண்டி மாதா, அம்பு, அங்குசம் தரித்த லலிதா பரமேஸ்வரியாக அன்னையை வழிபடுவது வழக்கம். இன்றைய தினம் பால் பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம். தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபடலாம். 

10. பத்தாவது நாள் விஜயதசமி. விஜயம் என்றாலே வெற்றி! தீயவை அழிந்து நன்மை பெருகும். நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும்.

பொதுவாக நவராத்திரி கொண்டாட்டம் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினமான மகாளய அமாவாசைக்கு மறுநாளிலிருந்து ஒன்பது நாட்கள் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த முறை 2020 புரட்டாசி மாதத்தில் 1-ம் தேதியும், புரட்டாசி 30-ம் தேதியும் அமாவாசை வந்துள்ளது. அதனால் முதல் அமாவாசையை தவிர்த்து, 30-ம் தேதியில் வரக்கூடிய அமாவாசைக்கு மறுநாளிலிருந்து அதாவது ஐப்பசி 1 (அக்டோபர் 17) தேதியிலிருந்து இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.  

நவராத்திரி கொலு பொம்மை எப்படி வைக்க வேண்டும்? கொலு வைக்க முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? கடந்த 17-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 26-ம் தேதி தசரா என பல்வேறு பகுதிகளில் கோலாகலாமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் இந்த தினத்தை விஜயதசமி என கடைப்பிடிக்கப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களில் அம்பாளுக்கு ஒன்பது வித அன்னையின் அவதார ரூபங்கள் அலங்கரிக்கப்படுவது வழக்கம். அந்த அன்னையின் உருவங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

துர்க்கையின் ஒன்பது உருவங்கள் வருமாறு:- 

முதல் நாளில் அன்னை மகேஸ்வரி ரூபம்,  இரண்டாம் நாளன்று கௌமாரி ரூபம்,  மூன்றாம் நாள் வராகி அம்மன் ரூபம்,  நான்காம் நாள் மகாலட்சுமி தோற்றம்,  ஐந்தாம் நாளில் வைஷ்ணவி ரூபம்,  ஆறாம் நாள் இந்திராணியாக அம்மன் காட்சி தருவாள்,  ஏழாம் நாளில் சரஸ்வதியாக அருள்வாள், எட்டாம் நாளில் நரசிம்ஹி ரூபம்,  ஒன்பதாம் நாள் சாமுண்டியாக தோற்றம் 

அக்., 25 (ஞாயிறு) சரஸ்வதி, ஆயுத பூஜை (நல்லநேரம் காலை 7.31 - 9.00 மணி) அக்., 26 (திங்கட் கிழமை) விஜயதசமி (கொலு எடுக்க காலை 6.00 - 7.30 மணி)  ஆயுத மற்றும் சரஸ்வதி பூஜைக்கு பாட, அபிராமி அந்தாதி போல் நல்ல தமிழ் பாடல்கள் உள்ளன. அவைகளில் உங்களால் முடிந்ததனை 5 நிமிடம் படியுங்கள். ஆரம்பிக்கும் பொழுது கணபதியினை வணங்கி, குருவினை வணங்கி பின்னர் அம்பிகை வழி பாட்டினை செய்ய வேண்டும். பூஜையில் நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், கலந்த சாதம் பாயசம், வடை என செய்வது சம்பிரதாயம். 

2 வெற்றிலை, 1 பாக்கு, 2 மஞ்சள் கிழங்கு, உங்களால் முடிந்த பழம், முடிந்தால் தேங்காய் உடைத்து நைவேத்தியம் செய்யுங்கள். நினைவில் கொள்ளுங்கள். பழங்களோ மிக உயர்ந்த நைவேத்தியம், ஏனெனில் பழங்கள் மிகவும் சுத்தமானது. வேண்டிய நாளன்று தேங்காய் உடைக்கலாம் தேங்காய் உடைத்து வழிபடுவது மன கஷ்டங்களை உடைக்கும் என்ற தொரு நம்பிக்கை உண்டு. சுத்தமான நீர் கொண்டு நைவேத்தியங்களை மூன்று முறை சுற்றி தரையில் நீரை விட்டு விடுங்கள். ஆரத்தி எடுப்பதில் நெய் தீபம் கொண்டு தீப ஆரத்தி செய்யலாம்.

மாலையில் சுத்தமான தட்டில் நீர் விட்டு சுண்ணாம்பு, மஞ்சள் கலந்து ஆரத்தி எடுத்து வாசலில் கோலத்தின் மேல் விட்டு விடலாம்.முடிந்தவரை அரிசி மாவு கோலமே போடுங்கள். ஒரு கொத்து மாவிலையினை வீட்டின் முனைப்பில் தொங்க விடுவது வீட்டின் பண்டிகையினைக் குறிக்கும். அது போலத்தான் கோலத்தில் செம்மண் இடுவதும் வீட்டின் விசேசத்தினைக் குறிக்கும்.  பெண்கள் நவராத்திரி துவங்கும் முன்பு வீட்டிலேயே மருதாணி அரைத்து இட்டுக் கொள்ளலாம். கண்ணாடி வளை யங்கள் அணியலாம். இவை மனதினை உற்சாகமாய் வைக்கும். பண்டிகை துவங்கும் முன்பே அசைவ உணவு உண்பவர்கள் அதனை நிறுத்தி விடலாமே.

அது போன்று பூஜை அறையில் இயன்றவர்கள் அலங்கார தோரண மின் விளக்குகளை வைக்கலாம். ஒரிருவருக்கு மஞ்சள், சிவப்பு, பச்சை நிறத்தில் சட்டை துணி வைத்துக் கொடுக்கலாம். பொரி, கடலை, வெல்லம், அவல் ஆயுத பூஜை அன்று செய்யப்படும் நைவேத்தியங்களில் சிறந்தது.  பூஜை சாமான்களில் வெள்ளியாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்காதீர்கள். செம்பு மிக சக்தி வாய்ந்தது. கலசமாக வைத்து பூஜை செய்பவர்கள் கலச நீரினை பூஜை முடிந்த பிறகு வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். அன்றாடம் ஒரு சுண்டல் என்பது உங்கள் பொருளாதாரம், நேரத்தினைப் பொறுத்து அமையட்டும். பொதுவில் மந்திரங்களை உபதேசம் பெற்றே சொல்ல வேண்டும் என்பது விதி. எனவே அவரவர் குடும்ப வழக்கப்படியே செய்வது நல்லது. மவுனமான மனதால் அம்பிகையை வேண்டுவதும், பூஜிப்பதும் மிகச் சிறந்த பலன் அளிக்கும் என்பது முன்னோர் அறிவுரை என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள

இந்த நாளில் வழிப்பட வேண்டிய மூன்று முக்கிய பெண் தெய்வங்கள் :

ஆயுதபூஜையன்று, அறிவாற்றல் அள்ளி வழங்கும் சரஸ்வதி தேவி, தூய்மை உள்ளத்தை வழங்கும் பார்வதி மற்றும் செல்வச் செழிப்பை அளிக்கும் தேவி லட்சுமி ஆகியோரை தவறாமல் வழிபட வேண்டும்.இந்த நாளின் வழிபாட்டில், துன்பங்களும் தடைகளும் நீங்கி கல்வி, தொழில் மற்றும் வாழ்க்கையில் நல்லதையே ஆசிர்வதிக்க வேண்டும் என்று பெண் தெய்வங்களிடம் வழிப்படுவது நன்மையை உண்டாக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து