முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது எப்படி? - மதுரை மாணவி விளக்கம்

திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வில் இந்த ஆண்டும் மாணவர்களை விட, மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மதுரை ஆனையூரை சேர்ந்த உய்யஸ்ரீநிலா என்ற மாணவி 666 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார். இவர் நீட் தேர்வுக்காக எந்த ஒரு பயிற்சி மையத்துக்கும் செல்லாமல் இந்த மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

இதுகுறித்து மாணவி உய்யஸ்ரீநிலா கூறியதாவது:-

எனது தந்தை பாண்டியராஜன், அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தாய் மீனா. நரிமேடு பகுதியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் இந்த வருடம் பிளஸ்-2 முடித்தேன். தமிழ்நாடு, பாண்டிச்சேரி அளவிலான கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அறிவியல் பிரிவில் நான் தான் முதல் மதிப்பெண் பெற்றேன்.பள்ளியில் படிக்கும்போதே நீட் தேர்வுக்கும் சேர்த்து என்னை தயார்படுத்தி கொண்டேன். பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது உன்னிப்பாக கவனித்து குறிப்பு எடுத்து வைத்துக் கொள்வேன்.

எனது தந்தை ஆசிரியராக இருப்பதால், அவரும் பயிற்சி மையத்துக்கு செல்ல வற்புறுத்தவில்லை. பயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்.அதுமட்டுமின்றி ஆன்-லைன் மூலம் நீட் தேர்வுக்கான பாடப்பகுதிகளை பார்த்து கற்று கொண்டேன். இணைய தளங்களில் இதற்கென தனித்தனி பக்கங்கள் உள்ளன.

அவற்றிற்கு சென்று, எனக்கு தேவையான தகவல்களை பெற்று கொண்டேன். நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் 9, 10, 11, 12-ம் வகுப்பு பாடங்களில் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளை தேர்வுக்காக மட்டுமல்லாமல் முழுமையாக படித்தாலே போதும். பெற்றோரும் என்னை சுதந்திரமாக விட்டு விட்டனர்.

அதனால்தான் என்னால் இவ்வளவு மதிப்பெண்கள் பெற முடிந்தது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், ஏற்கனவே படித்த பாடங்களையும் திரும்ப, திரும்ப படிக்க வேண்டும். அப்போது தான் தேர்வறைக்கு செல்லும் வரை படித்த பாடங்கள் நினைவில் இருக்கும். தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடியும்.

இந்த முறை தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் முயற்சி செய்தால் தேர்ச்சி பெறலாம். தோல்வியை கண்டு துவண்டுவிடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து