முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7.5 சதவீத ஒதுக்கீடு விவகாரம்: கவர்னர் பன்வாரிலாலுடன் 5 அமைச்சர்கள் சந்திப்பு : விரைந்து முடிவெடுப்பதாக உறுதியளித்துள்ளதாக அமைச்சர் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை ; நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டம் இயற்றி கவர்னரின்  ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. கவர்னர் காலதாமதம் செய்வதால் அவரை நேரில் சந்தித்து இது குறித்து வலியுறுத்த 5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு நேற்று காலை  அவரது இல்லத்தில் கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து பேச்சு நடத்தினர்.  

தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்கள் சமூகப் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால், அவர்களைப் பிற மாணவர்களுடன் ஒரே நிலையில் ஒப்பிட்டுத் தேர்வில் வகைப்படுத்துவது என்பது சம நீதிக்கு முரணானது என்பதால் மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை அடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்றி கவர்னரின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சில திருத்தங்கள் கோரி கவர்னர் அதை திருப்பி அனுப்பினார். பின்னர் அந்தத் திருத்தங்களுடன் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி ஒரு சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, சட்ட மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவப் பட்டப் படிப்பு சேர்க்கையின் போது மாநில ஒதுக்கீட்டில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கவும், மேற்படி இட ஒதுக்கீட்டு முறையினை நீட் தகுதியின் அடிப்படையில் உள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் விரிவாக்கம் செய்யவும், மேலும், மேற்படி இட ஒதுக்கீட்டு முறையினை அனைத்து மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி உள்ளடக்கிய அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும், சுயநிதிக் கல்லூரிகளுக்கும் அரசால் ஒதுக்கப்பட்ட அனைத்துப் பிரிவு இடங்களுக்கும் இச்சட்ட முன்வடிவில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

தமிழக அரசு நிறைவேற்றி உள்ள சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நடப்பாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் சுமார் 300 இடங்கள் கிடைக்கும். நீட் தேர்வு முடிவுகள் கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டு, மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்குக் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு காத்திருக்கிறது. இந்நிலையில் நீதிமன்றத்தில் இவ்வழக்கு வந்த போது கவர்னரை  நிர்பந்திக்க, உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும் கவர்னரின் அனுமதி குறித்து அரசுத் தரப்பு காத்திருந்தது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் கலந்தாய்வு தடைப்படுவதால் கவர்னர் விரைந்து முடிவெடுக்க வலியுறுத்தும் விதமாக கவர்னரை சந்திக்க தமிழக அரசின் சார்பில் 5 அமைச்சர்கள் கவர்னரை சந்திக்க நேற்று காலையில் ராஜ்பவனுக்குச் சென்றனர். தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கவர்னரை சந்தித்து பேச்சு நடத்தினர்.  இந்த சந்திப்பின் போது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என கவர்னரிடம் அமைச்சர்கள் வலியுறுத்தினர். 

இந்த சந்திப்பிற்கு பின்னர், தமிழக அரசு அனுப்பிய உள் ஒதுக்கீடு தொடர்பான சட்டத்திருத்தம் மீது காலம் தாழ்த்தாமல் முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஒரு மாதம் ஆகியும் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்திருத்தத்திற்கு கவர்னர் முடிவு எடுக்காதது ஏன்? என்று ஐகோர்ட் மதுரைக் கிளை கேள்வி எழுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

கவர்னரை சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மருத்துவர்களாக உருவாகிட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில், 7.5 சதவீத  உள் ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே சாத்தியம் என்கிற எண்ணத்தில் முதல்வர் முயற்சியால் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அது சட்டமாக்கப்படும் போது அரசுப் பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவர்களாக உருவாக முடியும். எனவே, அதற்கு ஒப்புதல் கோரி அமைச்சர்கள் 5 பேர் கவர்னரை சந்தித்து தமிழ்நாட்டில் நிலவுகின்ற சூழலைத் தெரிவித்தோம்.

குறிப்பாக கிராமப்புற, நகர்ப்புறத்தில் படிக்கின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கினால்தான் அவர்கள் மருத்துவர்களாக முடியும். தமிழகம் சமூக நீதிக்கான மாநிலம். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ள நிலையில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு அடையாளம், அங்கீகாரம் அளிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், 7.5 சதவீத  உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். தமிழகத்தில் தற்போதுள்ள நிலையில் கவுன்சிலிங் உள்ள நிலையில் விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கவர்னரிடம் கோரிக்கை வைத்தோம்.

நாங்கள் கூறியதைப் பொறுமையுடன் கேட்ட கவர்னர், விரைந்து முடிவெடுக்கிறேன். என்னுடைய பரிசீலனையில் உள்ளது. விரைவில் அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்தார். அவர் அதில் திருத்தங்கள் எதையும் சொல்லவில்லை. முதல்வர் கோரிக்கையைத் தெரிவித்த பிறகு உடனடியாக விரைவில் முடிவெடுக்கிறேன் என்று கவர்னர் தெரிவித்தார். தமிழகத்தில் கவுன்சிலிங் நடக்காததையும், நீங்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே கவுன்சிலிங் நடக்கும் என்பதையும் கவர்னரிடம் கூறி விட்டோம். அவர் கட்டாயம் பரிசீலிக்கிறேன் என்று கூறினார்.  இவ்வாறு அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து