முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அனைத்து கடைகளும் இன்று முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புதன்கிழமை, 21 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி வரை அனைத்து கடைகளும் இயங்க அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது. மேலும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்பும் குறைவாக இருந்து வருகிறது. 

எதிர்வரும் பண்டிகைக் காலத்தினை கருத்தில் கொண்டும்,  பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய்த் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழகம் முழுவதும் முழுக் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவங்கள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் 22.10.2020 முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகின்றன. 

 

அம்மாவின் அரசு எடுத்து வரும் சீரிய நடவடிக்கைகளாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பாலும், நோய்த் தொற்றின் பரவல் தொடர்ந்து குறைந்து வரும் இந்த சூழ்நிலை நீடிக்க எதிர்வரும் பண்டிகை காலங்களில், நோய்த் தொற்று அதிகரிக்காமல் தடுக்க கடைகள், பொது இடங்களில் அதிகம் கூடுவதை தவிர்க்கவும்; முகக்கவசம் அணிவதையும், குறைந்தது 6 அடி இடைவெளி கடைப்பிடிப்பதையும் அடிக்கடி சோப்பின் மூலம் கைகளை கழுவுவதையும், பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து