4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      தமிழகம்
Weather-Center 2020 10 26

Source: provided

சென்னை : நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம்  தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம்  தெரிவித்துள்ளது. 

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது. இதையொட்டி 29-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்தநிலையில் அதற்கான வாய்ப்பு இல்லை என்று ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது;-

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான சாதகமான நிலை இல்லை. 30-ம் தேதிக்கு மேல் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது. தற்போது ஒரு மேலடுக்கு சுழற்சி தமிழகத்தையொட்டி உருவாகியுள்ளது.

இதனால் தென் மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்பு உள்ளது.  தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும். திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.  

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டை, திருமயம் தலா 5 செ.மீ மழையும், உசிலம்பட்டி, ஒரத்தநாடு தலா 4 செ.மீ மழையும், ஆலங்குடி 3 செ.மீ மழையும், மதுரை விமான நிலையம், முத்துப்பேட்டை, சிவகிரி, தளி, ஜெயன்கொண்டம் தலா 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து