கொரோனா விழிப்புணர்வு விளம்பர வாகனங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 28 அக்டோபர் 2020      தமிழகம்
EPS 2020 10 28-1

Source: provided

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கோவிட்–-19க்கு எதிரான 33 எண்ணிக்கையிலான மக்கள் இயக்க விழிப்புணர்வு விளம்பர வாகனங்களை துவக்கி வைக்கும் அடையாளமாக, 7 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் குறும்பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினையும் வெளியிட்டு, கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கையேடுகளை பார்வையிட்டார்.

பிரதமர் மோடி கடந்த 8.10.2020 அன்று, கோவிட்-19க்கு எதிரான மக்கள் இயக்கத்தினை நாடு முழுவதும் தொடங்கி வைத்து, கோவிட் -19–க்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் இணைய வேண்டுகோள் விடுத்தார். ‘‘முகக்கவசம் அணிய வேண்டும், கை கழுவ வேண்டும், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், 6 அடி தூர இடைவெளி நடைமுறையை பின்பற்ற வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ள பிரதமர், ‘நாம் ஒன்றாக வெற்றி பெறுவோம், கொரோனாவை வெல்வோம்’ எனறும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் கோவிட்-–19 தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டும், மக்களிடையே கோவிட்-–19 தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் கொரோனா தொற்று தொடர்பான அரசின் செய்தி குறிப்புகள் மற்றும் செய்தி வெளியீடுகள் வெளியிடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் குணமடைந்தோரின் புள்ளி விவரங்கள் தினசரி அறிக்கையாக வெளியிடப்படுகிறது.

முதலமைச்சரின் கொரோனா தடுப்பு தொடர்பான வேண்டுகோள், தொலைக்காட்சிகளிலும் மற்றும் தனியார் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. முதலமைச்சரின் விழிப்புணர்வு வேண்டுகோள் குரல் அழைப்புகளாகவும், குறுஞ்செய்திகளாகவும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூலம் பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுப் பரவலை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘‘மக்கள் செய்யக்கூடியது மற்றும் செய்யக்கூடாதது”, தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்”, ‘‘தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களுக்கான மனநல ஆலோசனை”, ‘‘அறிந்து கொள்ளுங்கள்” உட்பட 24 தலைப்புகளில் துண்டு பிரசுரங்கள் மற்றும் மடிப்பேடுகள் தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி, நகராட்சியை ஒட்டியுள்ள மக்கள் தொகை அதிகமாக உள்ள ஊராட்சி பகுதிகளில் வீடுதோறும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் மக்களுக்கு காவல் துறை வாகனம் மற்றும் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கலைக்குழுவினர் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை, முதலமைச்சரின் வேண்டுகோள், மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு விடுத்த வேண்டுகோள், பொதுமக்களுக்கு வேண்டுகோள், மூத்த குடிமக்களுக்கான அறிவுரை, தொழிற்சாலை, அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், கடைகள், மீன் மார்கெட்களில் தனி மனித இடைவெளியை பின்பற்றுவதின் அவசியம், வீட்டில் தனிமைப்படுத்துல் செய்யக்கூடியது, செய்யக்கூடாதது,

பொதுமக்களுக்கு கொரோனா நோயாளியின் அறிவுரை, முகக்கவசம் அணிதலின் அவசியம், அடிக்கடி கை கழுவுதல் மற்றும் தனி மனித இடைவெளியை கடைபிடித்தலின் அவசியம் போன்ற கொரோனா தொடர்பான 54 விழிப்புணர்வு குறும்படங்கள், குறும்பாடல்கள் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுகாதாரத்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் பிற துறைகளால் தயாரிக்கப்பட்டு, அனைத்து தொலைக்காட்சி சேனல்களுக்கும், தனியார் உள்ளூர் சேனல்களுக்கும் வழங்கப்பட்டு தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக நேற்று கோவிட்-–19க்கு எதிரான 33 எண்ணிக்கையிலான மக்கள் இயக்க விழிப்புணர்வு விளம்பர வாகனங்களை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 7 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் குறும்பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினை முதலமைச்சர் வெளியிட, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் எல்.இ.டி. விளம்பர வாகனத்தில் ஒளிபரப்பப்பட்ட கோவிட்–-19 தொடர்பான விழிப்புணர்வு குறும்பாடல்களை முதலமைச்சர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, கோவிட்-–19 தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கையேடுகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் க. சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து