வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம்: முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 29 அக்டோபர் 2020      தமிழகம்
cm 2020 10 29

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சேலம் மாவட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலமாக ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 118 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 64 ஊராட்சிகளுக்குட்பட்ட 1,143 குக்கிராமங்களில் உள்ள 1,10,288 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். 

ஜல் ஜீவன் திட்டம், ஊரகப் பகுதிகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கி தரமான குடிநீரினை ஒவ்வொரு நபருக்கும் தலா 55 LPCD அளவு தொடர்ந்து வழங்கப்படுவதாகும். இத்திட்டம் 2020-2021ஆம் நிதியாண்டில் தொடங்கி 2023-2024 ஆம் நிதியாண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மத்திய அரசின் பங்கு 45 சதவீதமும், மாநில அரசின் பங்கு 45 சதவீதமும் மற்றும் பொதுமக்களின் பங்கு 10 சதவீதமும் ஆகும்.

அதன்படி இத்திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்திலுள்ள 5,71,683 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட வேண்டியுள்ளது. முதல் கட்டமாக 2020-2021ஆம் நிதியாண்டிற்காக, 118 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சேலம் மாவட்டத்திலுள்ள 64 கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட 1,143 குக்கிராமங்களிலுள்ள 1,10,288 வீடுகளுக்கு குழாய் மூலமாக குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்.  

இந்த நிதியாண்டில் (2020 –2021) சேலம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டம் தவிர்த்து பிற திட்டங்களின் மூலமாக 321 கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட 649 குக்கிராமங்களில் உள்ள 87,583 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 2021-2022ஆம் நிதியாண்டில் 173  கிராம ஊரட்சிகளுக்குட்பட்ட  1,779 குக்கிராமங்களில் உள்ள 1,90,079 வீடுகளுக்கும்,   2022 – 2023ஆம் நிதியாண்டில் 138  கிராம ஊரட்சிகளுக்குட்பட்ட 1,538 குக்கிராமங்களில் உள்ள 1,83,733 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம், மொத்தம் மூன்றாண்டுகளில் குடிநீர் இணைப்பு வழங்கப்படாத 5,71,683 வீடுகளுக்கும் 2022-2023ஆம் நிதியாண்டிற்குள் குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை  கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ். பழனிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து