கொரோனா இல்லாத நாடாக மாறிய தைவான்

வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2020      உலகம்
Taiwan 2020 10 30

Source: provided

தைபே : விதிமுறைகளை கண்டிப்புடன் கடைபிடித்ததால் கடந்த 6 மாதங்களாக கொரோனா இல்லாத நாடாக தைவான் மாறியுள்ளது. 

ஐரோப்பா கொரோனாவின் 2-வது அலையை சந்தித்து வருகிறது. பிரான்சிலும், ஜெர்மனியிலும் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தினமும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தாக்குகிறது. 

இந்த நிலையில் சீன குடியரசு நாடான தைவானில் கடந்த ஏப்ரல் 12 முதல் உள்ளூரில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. முன்னதாக 553 பேருக்கு தொற்று இருந்தது. 7 பேர் இறந்திருந்தனர். அதன் பிறகு கடந்த 200 நாட்களில் யாருக்கு தொற்று ஏற்படவில்லை. இருப்பினும் கட்டுப்பாடுகளை தைவான் கடைபிடித்து வருகிறது. 

சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை உயர தொடங்கிய ஜனவரி மாதமே தைவான் தனது எல்லைகளை மூடியது. பயணங்களை ஒழுங்குபடுத்தி வந்தது. இன்னமும் எல்லைகள் மீதான கட்டுப்பாடுகளை அப்படியே வைத்துள்ளது. முன்கூட்டியே எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கை இது என்கிறார்கள். அது தவிர நிபுணர்கள் பரிந்துரைத்த அனைத்து விதிகளையும் கண்டிப்புடன் அமல்படுத்தியது. 

தொற்று ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களை தீவிரமாக கண்டுபிடித்தது. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவருடன் சம்பந்தப்பட்ட 150 பேர் வரை தனிமைப்படுத்தியது. அனைவருக்கும் அரசால் முகக்கவசங்கள் விநியோகிக்கப்பட்டன. 

உள்ளூர் அளவில் தைவானில் கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், கடந்த 2 வாரங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 20 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் சிகிச்சையில் உள்ளனர். இதனால் எச்சரிக்கையை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து