நடிகர் ரஜினி அரசியலுக்கு வராமல் இருப்பது நல்லது: திருமாவளவன் பேட்டி

வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2020      தமிழகம்
Tirumavalavan 2020 10 30

Source: provided

சென்னை : பா.ஜ.க. சார்பில் வரும் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்த உள்ளதை தடை செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். அதை தொடர்ந்து  செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

வேல் யாத்திரை மூலம் சாதி, மத வெறியைத் தூண்டி தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த பா.ஜ.க.வும் இந்துத்துவ சக்திகளும் முயற்சி செய்கின்றன. நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, சூர்யா, வைரமுத்து உள்ளிட்டவர்கள் இந்து மதத்தைப் புண்படுத்தி விட்டதாகச் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் பா.ஜ.க.வினர்.

நீதிமன்றத்தைக் கொச்சைப்படுத்திய எச்.ராஜா, பெண்களை இழிவாகப் பேசிய எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் மீது பல தரப்புகளில் இருந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை, பா.ஜ.க.வினர் இணைய வழியில் புகார் அளித்தவுடன் வழக்குப் பதிவு செய்கிறது. 

மனு தர்மத்தை பெரியார் எதற்காக எதிர்த்தார் என்பது குறித்து இணையவழிக் கருத்தரங்கில் 40 நிமிடங்கள் நான் பேசிய காணொலியைத் தவறாகப் பரப்புகிறார்கள். அது என்னுடைய தனிப்படட கருத்து அல்ல. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் வட மாநிலங்களில் எப்படி ஆட்சியைக் கைப்பற்றினார்களோ அதேபோல தமிழகத்தில் இந்த உத்தியைக் கையாளுகிறார்கள்.

சாதிவெறியைத் தூண்டும் அசுவத்தாமன், எச்.ராஜா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய எனது பெயரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினி நல்ல முடிவை எடுத்திருக்கிறார்.

அவர் அரசியலுக்கு வராமல் இருப்பது நல்லது. அவர் உடல் நலத்தோடு பாதுகாப்பாக இருக்க வேண்டும். சாதி, மத அரசியலில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாகாமல் நலத்தோடும், வளத்தோடும் ரஜினி இருக்க வேண்டும்.  இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து