ரூ.6 கோடி கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபர் மகன் மீட்பு: துரித கதியில் செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு

வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2020      தமிழகம்
Trichy Car 2020 10 30

Source: provided

திருச்சி : திருச்சியில் ரூ.6 கோடி கேட்டு காரில் கடத்தப்பட்ட தொழில் அதிபரின் மகனை போலீசார் துரத்திச் சென்று மீட்டனர்.

திருச்சி வார்னர்ஸ் சாலையில் பிரபல தொழில் அதிபர் பி.எல்.ஏ. கண்ணப்பனின் வீடு உள்ளது. கடந்த புதன்கிழமை  மாலை வீட்டு முன்பு அவரது 12 வயது மகன் கிருஷ்ணன் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது காரில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள், சிறுவனை குண்டுக்கட்டாக தூக்கிப்போட்டு கடத்தி சென்றனர்.  

இதுகுறித்து குடும்பத்தினர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின் பேரில் சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக இறங்கினர்.  கண்ணப்பனின் வீட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை பார்த்த போது 3 பேர் சிறுவனை காரில் கடத்தி சென்றது கண்டறியப்பட்டது.

காரின் பதிவெண் போலி என்பது தெரியவந்தது. இதற்கிடையே கடத்தல் கும்பலில் ஒருவன் சிறுவன் கிருஷ்ணனின் வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்து, ரூ.6 கோடி கொடுத்தால் உங்கள் மகனை உயிருடன் விட்டு விடுகிறோம். இல்லையேல், நடப்பதே வேறு என்று மிரட்டி உள்ளான்.

இந்த நிலையில், இரவு வேளையில் திருச்சி வயலூர் ரோட்டில் சோமரசம்பேட்டையை நோக்கி சென்ற ஒரு கார் அங்கு சாலையில் வந்த ஆட்டோ ஒன்றில் இடித்தது. ஆட்டோ டிரைவர் காரை மறிக்கவும், காரை டிரைவர் நிறுத்தாமல் திருப்பிக் கொண்டு மீண்டும் திருச்சியை நோக்கி வேகமாக வந்தார்.

இதை கவனித்த அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் காரை மோட்டார் சைக்கிளில் துரத்தினர்.  வயலூர் சாலையில் உள்ள சோதனைச்சாவடியை நோக்கி வேகமாக வந்த அந்த காரை அங்கிருந்த போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால், கார் அங்கும் நிற்காமல் சென்றது.

இதனால் அங்கிருந்த போலீசாரும் காரை விரட்டி சென்றனர். அப்போது, கார் ஒரு முட்டுச்சந்தில் சென்று சிக்கிக் கொண்டது. காரில் இருந்த 3 பேர் கீழே இறங்கி தப்பி ஓடி விட்டனர்.

போலீசார் காரின் அருகில் சென்று பார்த்த போது, காரில் கடத்தப்பட்ட சிறுவன் கிருஷ்ணன் இருந்தான். அப்போதுதான் அது சிறுவனை கடத்திய கும்பலின் கார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. ஆனால் தங்களை போலீசார் அடையாளம் கண்டு தான் துரத்துவதாக நினைத்து கடத்தல் கும்பல் தப்பி சென்றதும் தெரியவந்தது.

போலீசார் காரில் இருந்த சிறுவன் கிருஷ்ணனை மீட்டனர். விசாரணையில், அந்த கார் திருச்சி மாவட்டம் கீழக்குறிச்சியை சேர்ந்த ஜீவானந்தம் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவரிடம் விசாரித்த போது, காரை பிரகாஷ் என்ற நண்பர் இரவல் வாங்கி சென்றதாக கூறினார். 

எனவே, கடத்தல் கும்பலில் உள்ள ஒருவர் பிரகாஷ் என்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மற்ற இருவர், பொன்மலை கல்கண்டார்கோட்டையை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. கடத்தல் கும்பலை தனிப்படையினர் தேடிவருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து