இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு : புதுமுக ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனுக்கு வாய்ப்பு

வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2020      விளையாட்டு
Cameron-Green 2020 10 30

Source: provided

சிட்னி : இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் புதுமுக ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் தேர்வாகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் போட்டிகள் நவ. 27, நவ. 29, டிச. 2 ஆகிய தேதிகளிலும், 20 ஓவர் போட்டிகள் டிச. 4, டிச. 6, டிச. 8 ஆகிய தேதிகளிலும் சிட்னி மற்றும் கான்பெர்ராவில் நடக்கிறது. 

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வரும் ஆல்-ரவுண்டர் 21 வயதான கேமரூன் கிரீன் முதல்முறையாக தேசிய அணிக்கு தேர்வாகி உள்ளார். கடந்த வாரம் ஷெப்பீல்டு கோப்பைக்கான முதல்தர கிரிக்கெட்டில் 21 வயதான கிரீன் மேற்கு ஆஸ்திரேலிய அணிக்காக 197 ரன்கள் குவித்தார்.

கேமரூன் கிரீனிடம் அபரிமிதமான திறமை இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ரிக்கி பாண்டிங்குக்கு பிறகு நான் பார்த்தமட்டில் மிகச்சிறந்த பேட்டிங் திறமையை கொண்டவராக இருக்கிறார். 6 அடி 7 அங்குலம் உயரம் அவருக்கு சாதகமான அம்சமாகும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஐ.பி.எல். போட்டியின் போது கணுக்கால் காயத்தால் பாதியில் விலகிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இன்னும் முழுமையாக குணமடையாததால் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

உடல்தகுதியை நிரூபிக்க டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிராக நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஏ அணிக்காக விளையாட அவர் அறிவுறுத்தப்பட்டு உள்ளார். ஆல்-ரவுண்டர் ஹென்ரிக்ஸ் 3 ஆண்டுக்கு பிறகு அழைக்கப்பட்டுள்ளார்.  

ஆஸ்திரேலிய அணி வருமாறு:- ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), சீன் அப்போட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), கேமரூன் கிரீன், ஹேசில்வுட், மோசஸ் ஹென்ரிக்ஸ், லபுஸ்சேன், மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் சுமித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து