முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பூசி இலவசம் எனும் வாக்குறுதி தேர்தல் நடத்தை விதிமுறை மீறலில் சேராது: தேர்தல் ஆணையம் விளக்கம்

சனிக்கிழமை, 31 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பாட்னா : பீகாரில் கொரோனா வைரஸ் தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி அளித்திருப்பது தேர்தல் நடத்தை விதிமுறை மீறலில் சேராது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

பீகாரில் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. முதல்கட்டத் தேர்தல் கடந்த 28-ம் தேதி 71 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ளது. அடுத்த இரு கட்டங்கள் நவம்பர் 3, 7-ம் தேதிகளில் நடக்கிறது,

10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.  இந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். அதில், பீகாரில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஐ.சி.எம்.ஆர். அங்கீகாரம் அளித்தபின், அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். 

பா.ஜ.க.வின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ், ஆர்.ஜே.டி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. 

இந்நிலையில் ஆர்.டி.ஐ. ஆர்வலர் சாகேத் கோகலே, தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்பது குறித்து புகார் செய்திருந்தார். 

அதில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பீகார் தேர்தலில் ஆதாயம் தேடப் பார்க்கிறது. அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்பது தேர்தல் நடத்தை விதிமுறைமீறல் எனத் தெரிவித்திருந்தார். 

இந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் தேர்தல் வாக்குறுதியில் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்ற பா.ஜ.க.வின் அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறை மீறலில் சேராது.

இந்த அறிவிப்பில் எந்தவிதமான விதிமுறைமீறலும் இல்லை. தேர்தல் அறிக்கைக்கான சில வழிகாட்டு நெறிமுறைகள், நடத்தை விதிமுறைகள் 8-ம் பிரிவில் இருக்கிறது. அந்த வகையில் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கும் பா.ஜ.க.வின் வாக்குறுதியை விதிமுறை மீறலில் சேர்க்க முடியாது. 

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநிலக் கொள்கையை வழிநடத்தும் கோட்டுப்பாடுகளின்படி, மக்களுக்கு நலன் சார்ந்த அறிவிப்புகளை அரசுகள், கட்சிகள் வெளியிடுகின்றன.

தேர்தல் அறிக்கையில் இது போன்ற நலன்சார்ந்த வாக்குறுதிகளுக்கு தடையில்லை. இது போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றக்கூடிய வகையில் இருந்து அதன் மூலமே வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து