முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நாள் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் ஜிம்பாப்வே பாகிஸ்தானை வீழ்த்தியது

புதன்கிழமை, 4 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ராவல்பிண்டி : பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 6 விக்கெட்டுக்கு 278 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 118 ரன்களும், பிரன்டன் டெய்லர் 56 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் 10 ஓவர்களில் 3 மெய்டனுடன் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். 

அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 88 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய போதிலும் கேப்டன் பாபர் அசாம் நிலைத்து நின்று போராடினார். அறிமுக வீரர் குஷ்தில் ஷா (33 ரன்), வஹாப் ரியாஸ் (52 ரன்) ஒத்துழைப்புடன் தனது 12-வது சதத்தை கடந்த பாபர் அசாம் (125 ரன், 125 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) 49-வது ஓவரில் 9-வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. 

பரபரப்பான இறுதி ஓவரை இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் நிகரவா வீசினார். இதில் முதல் 5 பந்துகளில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் 8 ரன்கள் எடுத்தனர். கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்ட நிலையில் முகமது முசா பவுண்டரி அடித்து ஆட்டத்தை சமன் (டை) செய்தார். பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 278 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பிளஸ்சிங் முஜாரபானி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 

ஆட்டம் சமன் ஆனதால் முடிவை அறிய சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 4 பந்தில் 2 விக்கெட்டையும் பறிகொடுத்து 2 ரன் மட்டுமே எடுத்தது. பின்னர் 3 ரன் இலக்கை ஜிம்பாப்வே அணி 3-வது பந்தில் எட்டி திரில் வெற்றியை பெற்றது. இருப்பினும் ஜிம்பாப்வேக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. 3 போட்டி கொண்ட இந்த தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டிகள் நடக்கிறது. முதலாவது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் 7-ந்தேதி நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து