முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தபால் மூலம் சபரிமலை பிரசாதம்: ஆன் லைன் முன்பதிவு தொடங்கியது

சனிக்கிழமை, 7 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதம் தபால் மூலம் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கான ஆன்லைன் முன் பதிவு தொடங்கியது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், அதுவும் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தநிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானமும், தபால் துறையும் இணைந்து சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை தபால் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கேரள தேவஸ்தான துறை அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் முன்னிலையில் கையெழுத்தானது. தொடர்ந்து ஆன்லைன் முன்பதிவை அமைச்சர் தொடங்கி வைத்தார். 

பிரசாத பார்சல் அனுப்புவது குறித்து அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:-

சபரிமலை சாமி பிரசாதத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது. இந்தியாவில் எந்த ஒரு தபால் நிலையத்தில் இருந்தும் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி முன் பதிவு செய்யலாம். அரவணை, நெய், குங்குமம், மஞ்சள், விபூதி மற்றும் அர்ச்சனை பிரசாதம் அடங்கிய பிரசாத பார்சலின் விலை ரூ. 450 ஆகும். நவம்பர் 16-ம் தேதி முதல் பிரசாத பார்சல்கள் விரைவு தபால் மூலம் முன் பதிவு செய்த பக்தர்களுக்கு அனுப்பப்படும். 

கொரோனா காரணமாக சபரிமலை தரிசனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சாமி பிரசாதம் தபால் மூலம் அனுப்பும் சேவை ஐயப்ப பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து