முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு கால அட்டவணை வெளியீடு

சனிக்கிழமை, 7 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : குடிமைப் பணித் தேர்வுகளுக்கான முதன்மைத் தேர்வு கால அட்டவணையை யு.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப் பணிகளுக்கான குடிமைப் பணித் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதில் முதல் நிலைத்தேர்வு (prelims), முதன்மை தேர்வு (mains), மற்றும் நேர்முகத் தேர்வு என்ற அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 31-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக மார்ச் 25-ம் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு அக்டோபர் 4-ம் தேதி நடைபெற்றது. இதற்கான முதன்மைத் தேர்வுகள் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் தேதி ஆரம்பித்து 9,10,16,17 என 5 நாட்கள் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில் முதன்மைத் தேர்வுக்கான கால அட்டவணையை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து யு.பி.எஸ்.சி.யின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலில், முதல் நாள் மட்டும் ஒரு ஷிப்ட்டிலும் மீதமுள்ள நாட்களில் இரண்டு ஷிப்ட்டுகளிலும் முதன்மைத் தேர்வு நடக்கும். முதல் ஷிப்ட் தேர்வு காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் இரண்டாவது ஷிப்ட் தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடக்கும். 

கட்டுரைக்கான முதல் தாள் தேர்வு ஜன. 8-ம் தேதி முதல் ஷிப்ட்டில் நடக்கும். இரண்டாம் தாளின் நான்கு பிரிவுத் தேர்வுகளும் (I, II, III, IV) ஜன. 9 மற்றும் 10-ம் தேதி இரண்டு ஷிப்ட்டுகளிலும் தொடர்ந்து நடைபெறும். இந்திய மொழி மற்றும் ஆங்கிலம் தொடர்பான முதல் தாள் தேர்வு ஜன.16-ம் தேதி இரண்டு ஷிப்ட்டுகளில் நடக்கும். விருப்பப் பாடத்துக்கான 1 மற்றும் 2-ம் தாளுக்கான தேர்வு ஜனவரி 17-ம் தேதி இரண்டு ஷிப்ட்டுகளிலும் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு: https://upsc.gov.in/sites/default/files/TT-CSME-2020-Engl-061120.pdf இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து