முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹஜ் புனித யாத்திரை செல்ல டிச.10-க்குள் விண்ணப்பிக்கலாம் மத்திய அமைச்சர் தகவல்

சனிக்கிழமை, 7 நவம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை  2021-ம் ஆண்டில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் சவுதி அரேபியா புறப்படும் 72 மணி நேரத்துக்கு முன், கொரோனா பரிசோதனை செய்து, நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டினர் மட்டுமன்றி சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்களும், புனிதப் பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதித்து சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 6 வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் மெக்காவிலும், மதீனாவிலும் புனிதப் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் சவுதி குடிமக்களையும், அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களையும் ஹஜ் பயணம் செய்ய கடந்த ஜூலை மாதம் சவுதி அரேபிய அரசு அனுமதித்தது. 

ஹஜ் புனிதப் பயணம் இந்த ஆண்டு ரத்து இல்லை. அதேசமயம், வெளிநாடுகளில் இருந்து எந்தவிதமான பயணிகளும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். உள்நாட்டைச் சேர்ந்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து உள்நாட்டில் தங்கி இருப்பவர்கள் மட்டுமே குறைந்த அளவில் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் 2021-ம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் குறித்து ஹஜ் கமிட்டி மற்றும் நிர்வாகிகளுடன் மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி நேற்று மும்பையில் ஆலோசனை நடத்தினார்.  அதன்பின் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

2021-ம் ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அரசிடம் தாக்கல் செய்ய டிசம்பர் 10-ம் தேதி கடைசியாகும். இந்த விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமும், தபால் மூலமும், ஹஜ் மொபைல் செயலி மூலமும் அனுப்பலாம். கொரோனா வைரஸ் பரவல் இருப்பதைத் தொடர்ந்து ஹஜ் புனிதப் பயணத்துக்கு வருவோர் சவுதி அரேபியா புறப்படும் முன் 72 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு ஹஜ் பயணம் புறப்படும் இடம் 21-ல் இருந்து 10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத், பெங்களூரு, கொச்சி, டெல்லி, கவுகாத்தி, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் இருந்து மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும்.  ஹஜ் புனிதப் பயணத்துக்கு ஆண் துணை இல்லாமல் பெண்களும் விண்ணப்பிக்கலாம். புதிதாக விண்ணப்பம் செய்யும் பெண்களின் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும். இவ்வாறு ஆண் துணையின்றி விண்ணப்பிக்கும் பெண்கள் தேர்வு என்பது லாட்டரி முறை தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். இவ்வாறு மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து