முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோலி 2 வீரர்களுக்கு மதிப்பானவர்: மெக்ராத் சொல்கிறார்

புதன்கிழமை, 18 நவம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மெல்பர்ன் : இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

ஒருநாள் தொடர் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. டிசம்பர் 2-ந்தேதியுடன் ஒரு நாள் போட்டி முடிகிறது. 20 ஓவர் தொடர் டிசம்பர் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடக்கிறது.

அதைத்தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 17-ந் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவாக நடக்கிறது. இந்திய அணி கேப்டன் வீராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுவார். எஞ்சிய 3 டெஸ்டில் ஆட மாட்டார். அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை பிறப்பதால் முதல் டெஸ்ட் முடிந்தபிறகு நாடு திரும்புவார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வீராட் கோலி 3 டெஸ்டில் விளையாடாதது இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்நாட்டு முன்னாள் வேகப்பந்து வீரர் மெக்ராத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

வீராட்கோலி ஒரு திறமை வாய்ந்த வீரர். அவர் 4 டெஸ்டில் 3 போட்டியில் ஆடாதது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

கோலி 2 வீரர்களுக்கு மதிப்பானவர். ஒன்று பேட்ஸ்மென் மற்றொன்று கேப்டன். அவர் ஆடுகளத்தில் மிகுந்த ஆக்ரோசத்துடன் செயல்படக்கூடியவர்.

இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த விரும்பும். வார்னர், சுமித் ஆகியோர் அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலத்தை அளிக்கும்.

முதல் டெஸ்ட் போட்டியே சுவாரசியமானது. ஏனென்றால் பகல்-இரவாக நடக்கிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இதுவரை பகல்-இரவு டெஸ்டில் விளையாடியது கிடையாது. சூரியன் மறைந்த பிறகு இரவு நேரத்தில் வேகப்பந்து வீரர்களுக்கு சாதகமாக இருக்கும்.

வீராட்கோலி இல்லா விட்டாலும் இந்திய அணி பேட்டிங் வரிசை பலமாக இருக்கிறது. புஜாரா, ரகானே, போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனாலும் வீராட் கோலி அளவுக்கு பலம் வாய்ந்து இருக்க முடியாது.ஆஸ்திரேலியாவில் அவரது சிறப்பான ஆட்டத்தை யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். இவ்வாறு மெக்ராத் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து