20 மாத கால தரையிறக்கத்துக்கு பிறகு பறக்க தயாராகிறது போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்

புதன்கிழமை, 18 நவம்பர் 2020      உலகம்
Boeing-737-Max 2020 11 08

Source: provided

வாஷிங்டன் : எத்தியோப்பியாவில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஆண்டு மார்ச் 10ம் தேதி விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். முன்னதாக இதே ரக விமானம் இந்தோனேசியாவில் 2018ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர். 

இந்த இரண்டு மிகப்பெரிய விபத்துகளைத் தொடர்ந்து ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது. ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், இந்தியா, சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், கனடா உள்ளிட்ட நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்தன. இதன் காரணமாக போயிங் நிறுவனத்துக்கும், அமெரிக்க அரசுக்கும் அழுத்தம் அதிகரித்தது. 

கடும் அழுத்தங்களைத் தொடர்ந்து, போயிங் 737 மேக்ஸ் 8 மற்றும் போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18-ம் தேதி இந்த விமானங்கள் அனைத்தும் (837) தரையிறக்கப்பட்டன. இதுவே அமெரிக்க விமான போக்குவரத்து வரலாற்றில் அதிக அளவிலான விமானங்களின் தரையிறக்கம் ஆகும். அதன்பின்னர் விமானத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 

இந்நிலையில், 20 மாத இடைவெளிக்கு பிறகு போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன. இந்த விமானங்களை மீண்டும் வர்த்தக ரீதியாக இயக்குவதற்கு, மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் அங்கீகாரம் அளித்து சான்றிதழ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விமானத்தின் புதுப்பிக்கப்பட்ட விமான கட்டுப்பாட்டு அமைப்பை முழுமையாக பரிசோதனை செய்ததாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் மற்றும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து